சிரிப்போம், சிறப்போம் !
மகிழ்வின் அடர்த்தி
குரல்வளையில் புகுந்து
நாக்கை உலுக்கி
பல்லை விலக்கி
உதட்டைத் தழுவி
வந்து விழுகையில்
சிரிப்பெனப்படுகிறது !
மேலுதட்டுக்கும், கீழுதட்டுக்கும்
இடையேயான தூரம் - நம்
களிப்பின் நீண்ட அகலம் !
அதிர்ந்து சிரிக்க மாட்டாள்
பெண் - சிரித்தே அதிர்ந்து
போவான் ஆதிக்க ஆண் !
அறுசுவைகளுடன்
உயிர்வாழத் தேவையான
ஏழாவது சுவை இச்சுவை !
நம்மை - நம் வாலுடன்கூடிய
மூதாதயர்களிடமிருந்து
பிரித்து காட்டும் இக்காரணி
இல்லாதவன் மனிதனன்று...
இருப்பவன் புனிதனன்றோ ?
அன்பு கலந்து அம்மா
கோபம் கலந்து அப்பா
வாஞ்சையுடன் தாத்தா
துஞ்சியபின் பாட்டி
அடிக்கடி தம்பி
அடித்துவிட்டு அக்கா
என ஒவ்வொருவரும்
என்னிடம் சிரிப்பதுண்டு...
சொர்க்கங்கள் திறந்துமூடும்
நற்கணங்கள் அவை !
சிரிக்கும் குழந்தைகளின்
சின்னக் கன்னக் குழிகளில்
அமிர்தம் நிரம்பி வழியக்
கண்டதுண்டு - சன்னல்வழி
சொர்க்கங்கள் அவை !
ஒருவேளை சோறிட்டவுடன்
மூதாட்டியின் முகத்திலும்
சந்தோஷ முத்திரைகள் !
பெரியோர்களிடம் மென்சிரிப்பு
வயதொத்தவர்களிடம் புன்சிரிப்பு
நட்புகளிடம் வெடிசிரிப்பு
எதிரணியுடன் வறட்டுச் சிரிப்பு
எதிர் வரும் ராணிகளுடன்
எழுந்து வருவது கண்ணச் சிரிப்பு
அவளிடம் அரிதாய் கள்ளசிரிப்பு !
துரோகிகளிடம் - சிரிப்பது போல்
நடிப்பது என் தனிச்சிறப்பு !
ஒருபுறத்து உதடுதூக்கி
காதுக்கு இதமாய்
கண்ணுக்கு உரமாய்
அவள் சிரிக்கும்போது...
என் இதயமும் - தன்னை மறந்து
சிரிக்கும் என்னைப்போலவே !
சமயங்களின் கண்களால்
சிரிக்கும் காரியக்காரியவள் !
பண்பட்ட நாம்
புண்படா வண்ணம்
புன்னகைகள் பூத்து
சிரிப்போம், சிறப்போம், இறப்போம் !