[425] துளிப்பாக்கள் சில (03-03-2013)
சட்டத்தை
மடித்துக்
கைகளில்
தொங்கப் போட்டவராக
வந்தார் வக்கீல்!
***
டாஸ்மாக்
கொடுத்துக் கொடுத்தே
அவருக்குப்
போதை வந்துவிட்டது
இன்னும் அதுகமாக் விற்க..
***
காதல்..
கண்களைத்
திறந்துகொண்டே
விளையாடும்
கண்ணாமூச்சு!
***
வானில் நடப்பதுபோல்
தரையில்
நடக்கச் செய்யும்
போதை..
***
பேசிய போது
பேசாததுபோலும்
பேசாதபோது
பேசியதுபோலும்
நினைக்க வைக்கும் ஒருவித
மயக்கம்..
***
நெருங்கியதை
விட்டுவிட்டு
நெருங்க்காததைத்
தேடவைக்கும்
ஒரு தேடல்..
***
தொலைந்தது தெரியாமலும்
கிடைத்தது புரியாமலும்
போகும்
ஒரு கிறக்கம்!
***
சுனாமி..
சகித்துச் சகித்துப்
புழுவாகிப் போனவர்களைக் கண்டு
எழுந்து வந்தது
பேரலை..
சுகித்துச் சுகித்துப்
புரண்டுகொண்டிருந்தவர்களைப்
பார்த்ததும்
சுருட்டிக்கொண்டு திரும்பியது
கடலுக்கு..
***