நவீன ஆண்மகன்-கே.எஸ்.கலை
நாகரிகம் என்ற போர்வை
போர்த்திக் கொண்ட சிங்கமாக -
ஆட்டம்போடும் பசங்களெல்லாம்
ஆகினரே அசிங்கமாக !
கன்னியரை விஞ்சி நிற்கும்
கலாசார மோகங்களால்
காளையர்கள் கொஞ்சம்கொஞ்சம்
காடையராய் மாறினரே !
•
காதுகுத்தித் தோடு போட்டு,
உதட்டுக்குள்ளே ஆணியடித்து,
இடுப்பை விட்டு இறங்கி போகும்
காற்சட்டை போடுகிறானே !
புருவத்தில் துளையிட்டு
வெள்ளிநகை போட்டுக் கொண்டு,
பருவத்துக் கன்னியரை
எள்ளிநகை செய்கிறானே !
பச்சைக்குத்த இச்சைக் கொண்டு
மேனியெல்லாம் கோலமாக !
போட்ட கோலம் ஊர் பார்க்க
போகிறானே அலங்கோலமாக !
•
தெருவோர திண்ணை வேண்டும்
வாய் முழுக்க பாக்கு வேண்டும்!
கிண்டலடிக்க மாது வேண்டும்
கிறுக்குப் பிடிக்க மது வேண்டும் !
காதலிக்க கன்னி வேண்டும் -
மறுத்தாலோ பொறுக்க மாட்டான் !
துரத்தி அவள் உயிரெடுப்பான்
கற்பழிக்க அஞ்ச மாட்டான் !
முகநூலில் கணக்கு வேண்டும்
முப்பொழுதும் அரட்டை வேண்டும்
கொச்சையாக, மொக்கையாக
கூத்தடிக்கும் கூட்டம் வேண்டும் !
•
தந்தைச் சொல் மதிப்பதில்லை
பள்ளிக் கூட படிப்புமில்லை !
சினிமா வசனம் பேசிக் கொண்டு
வெட்டி வாழ்க்கை வாழுகிறான் !
இந்த வழிப் பயணமெல்லாம்
இழிந்த வாழ்க்கைத் தருவதன்றோ !
இனியேனும் நீ நினைத்தால்
இனிய வாழ்க்கை வாழலாமே ?

