இலையின் மூலம்…

இலையின் மூலம்…
----------------------------
முற்றிய விதை முளை விட்டு
மண் பிளந்தது…
இலையாம் துளிரின்
இனிய பிறப்பு!
“இதற்கா நான் பிறந்தேன்?”
என்றது இலை.
“இல்லை” என்றதோர் குரல்.
“இல்லையில்லை…
இன்னும் இருக்கிறது…”
என்றது குரல்!
செடியும் வளர்ந்து
செழிப்பாகி
தண்ணிழல் மரமாய்
தலை உயர்த்தும்…
“இதற்கா நான் பிறந்தேன்?”
என்றது இலை.
“இல்லை”என்றது குரல்.
“இன்னும் இருக்கிறது, பொறு.”
சலித்துப் பழுத்த இலை
சருகாகி உதிர்கையிலே,
“ச்சீ.
இதற்கா நான் பிறந்தேன்?
இப்போதாவது சொல் குரலே…”
என்றது ஏக்கமாய்.
“ஆமாம்,ஆமாம்
இதற்குத்தான் பிறந்தாய்…
சருகாய் உதிரத்தான்
சகத்திலே நீ உதித்தாய்…
‘இல்லை’ என்பதன்
குறுக்கந்தானே இலை?
ஓ, இலையே!
நீ இல்லை.
ஆம் நீ – இது இல்லை…”
என்று தொடர்ந்த குரல்
இப்படி முடித்தது:
“சருகாகி உதிர்வதற்குச்
சற்றும் வருந்தாதே
நீ…
இலையும் இல்லை
சருகும் இல்லை
இனி வரும் வளர்ச்சிக்கான
உரம்!”

எழுதியவர் : Anbuselvan (28-Mar-13, 2:42 pm)
சேர்த்தது : Anbu selvan lotus
பார்வை : 64

மேலே