^^^^^^பறவைகள் பலவிதம் ^^^^^^^

பள்ளம் மேடிலா
வெட்ட வெளியில்
வெள்ளைச் சிறகை
விரித்து நீட்டி
வானை அளக்கும்
பறவை உயிரினம்
அளவை இயலின்
ஆசிரியக் கூட்டமோ!

குயில் இட்டது
என்று அறிந்தும்
கொத்தி அதனைக்
குடித்து விடாமல்
முட்டை மீதில்
முழுதாய் அமரும்
காக்கை செய்வது
பிறரன்புப் பணியோ?

குச்சி கொண்டு
கயிறு திரித்து
தச்சு வேலை
செய்தது போலே
கிழக்கு வாசல்
கொண்டு வீட்டை
கட்டிடும் சிறு
தூக்கணாங் குருவி--

வாஸ்து பார்த்ததா
வாதம் செய்ததா
சாஸ்திரி கொண்டு
சாதம் படைத்ததா
கட்டியதே தெரியாமல்
கட்டுமதன் வீட்டை
கட்டிடப் பொறியியல்
கலைக்கது தந்தையோ?

ஒற்றைக் காலை
ஒட்டி வயிற்றுடன்
மறைத்து நின்று
ஓடு்மீன் விட்டு
உறுமீன் கொத்தும்
கொக்கு நமக்கு
தவமும் பொறுமையும்
போதிக்கும் புத்தரோ!

ஆயிரம் அடிகள்
மேலே பறந்தும்
சாயும் பார்வையில்
சிக்கிடும் உணவினை
வட்டங்கள் இட்டுப்
பறந்து கவ்விடும்
பருந்து பறவையில்
ராஜ பட்சியோ!

தனது அலகினால்
தன்னையே குத்தி
குருதி வடித்துக்
குஞ்சுகள் குடிக்கக்
கொடுக்கும் பெலிக்கான்
பறவையின் தியாகம்
தாய்மையின் சிகரமோ
தன்னிகரிலா மகுடமோ!

வான்வழி பார்வையை
வழிப்போகும் மற்றொரு
பறவையிடம் சென்று
எந்தப் பறவையும்
சொந்தம் கொண்டாடி
சொல்லியதும் இல்லை
அதைக் கேட்டவை
துள்ளியதும் இல்லை.

ஏனெனில் பறவை
பறப்பது இயல்பு
சிறகை விரிப்பது
சிறப்பு இயல்பு.
இறகின் சீர்மையால்
ஒன்றாய்ப் பறக்கும்
ஒரே இனத்துப்
பறவைகள் பலவிதம்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (3-Apr-13, 11:49 am)
பார்வை : 432

மேலே