கல்...
கல்
கண்ணீராலானது.
வேண்டுமானால்..
"கடவுளின்" இதயத்தில்
காது வைத்துப் பாருங்களேன்.
******************************************************************
கல்...
குளத்தில் சலனங்களை
உருவாக்கியபடி...
மூழ்கி விடுகிறது நீருக்குள்.
வளையங்களை ரசிப்பவன்...
நினைவில் வருவதில்லை
மூழ்கிய கல்.
*****************************************************************
சிறு கல் ஒன்றை
வீசி உடைக்கிறேன் பெரும் வேகத்துடன்.
பள பளப்பும்..மினு மினுப்புமாய்....
தெறித்துக் கிடக்கிறது கல்.
இரவின் கனவில்...
கண்ணோரம் கசியும் நீருடன்...
என் முன்னே நிற்கிறது...
ஒரு உடைந்த கல்.
**************************************************************
என் வீட்டில் இருக்கும்
கல்லினால் ஆன நாய் பொம்மையை...
தினம் ஒரு முறையாவது நக்கி...
தன் அன்பைச் சொல்லிவிடுகிறது...
என் வீட்டில் வளரும் நாய்.
**************************************************************
கல் மேடைகளில்...
அமர்ந்து பறக்கும் பறவைகள்...
ஊரெங்கும்... தம்... தம்...குரலில்
சொல்லித் திரிகின்றன...
அந்த நடுகல் வீரனின் கதையை.
**************************************************************
கற்கள்தாம் மலையாவதாய்
ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருந்தாராம்.
என் பையனின் புத்தகப் பையிலிருந்து
நான் நேற்று ஒரு ...
சிறு கல்லைக் கண்டெடுத்தேன்.
***************************************************************
கல்...
கடவுள்தான்...
அதன் வாழ்க்கையைக் கொஞ்சம்
வாசித்துப் பாருங்களேன்.
***************************************************************