கோடையின் தாக்கத்தில் தப்பிக்க வீட்டைப் பராமரிப்பது எப்படி..?!
பொதுவாகவே வீட்டின் வெப்பநிலையை தீர்மானிப்பதில் பெயிண்ட் முக்கிய பங்கு வகிக்கின்றது. அடர்ந்த நிறத்தில் உள்ள பெயிண்ட்டுகள் வெப்பத்தை பிரதிபலிப்பதால் வெப்பக்கதிர்கள் வீட்டை சுற்றிலும் உட்புகுந்துவிடுகின்றது.
தற்போது பெரும்பாலான வீடுகளுக்கு அடர்ந்த நிற பெயிண்ட்டுகள் தான் அடிக்கப்படுகின்றது. இதை தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும். இந்த பெயிண்டுகளால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கின்றது. வெள்ளை பெயிண்ட் அடித்துள்ள வீடுகளில் வெப்பம் குறைந்து காணப்படுகிறது.
பொதுவாக வீட்டின் மேல்தளம் மொட்டைமாடியாக இருக்கும் பட்சத்தில் வெப்பம் வீட்டிற்குள் இறங்கும். வெப்பம் கீழே இறங்காமல் இருப்பதற்கு தான் சுண்ணாம்பு, செங்கல் கொண்ட கலவையை மேல்தளத்தில் போடுவது வழக்கத்தில் இருந்து வந்தது.
இதற்கு சுர்க்கி என்று கூறுவார்கள். ஆனால் நாளடைவில் இந்த சுர்க்கி போடும் முறையை மாற்றி ஓடுகளை பதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. சுண்ணாம்பு மற்றும் செங்கல் கலவையானது குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியாகும்.
முறையாக சுர்க்கி போடப்பட்ட வீடுகளில் மேல்கூரையில் இருந்து வெப்பம் வீட்டிற்குள் இறங்குவது என்பது மிக குறைந்த அளவே இருக்கும். எனவே வீடு கட்டும்போது சுர்க்கி போடுவதை அவசியமாக கருதினால் கோடைகால தொல்லையில் இருந்து ஓரளவு விடுபடலாம்.
வீட்டின் வெப்பத்தை குறைக்க கார்டனிங் மிகவும் அவசியமாகும். வீட்டை சுற்றிலும் தோட்டங்கள் அமைப்பது இது போன்ற கோடைகாலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டு தோட்டங்களில் உள்ள சொடிகளால் வெப்பம் தனிந்து சற்று குளிர்ச்சி காண வழிவகுக்கும்.
இதே போல வீட்டிற்குள்ளும் தொட்டிகளில் பசுமையான செடிகளை வளர்க்கலாம். வீட்டின் அனைத்து அறைகளிலும் காற்று உள்ளே வரும் வகையில் பகல் நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைப்பது அவசியமாகும்.
ஜன்னல்களுக்கு காட்டன் திரைசீலைகளை அமைப்பது நல்லது. முடிந்த வரை மின்விசிறிகளை அதிக நேரம் சுழலவிடுவது வீட்டின் வெப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துவிடும் என்பதால் தேவையில்லாத போது மின்விறிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
வீட்டின் மற்ற அறைகளை விட சமையல் அறையில் கண்டிப்பாக வெப்பம் அதிகரித்து காணப்படும். குறிப்பாக சமையல் செய்யும் போது ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற சமையல் செய்யும் போது சிம்னியை ஓட விடுவது அவசியம்.
பொதுவாக சிம்னி மற்றும் எக்சாஸ்ட்பேன் ஆகியவற்றை எண்ணெய் பயன்படுத்தும் போதும் வறுக்கும்போதும் தான் சிலர் அதை ஓட விடுவார்கள். மற்ற நேரங்களில் கண்டுகொள்ளமாட்டார்கள்.
ஆனால் இது போன்ற கோடைகாலத்தில் சமையல் செய்ய தொடங்கும் போதே சிம்னியை ஓட விட்டால் சமையல் அறையில் இருக்கின்ற வெப்பம் ஓரளவு வெளியேறி விடும்.
இதே போல கோடை காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் ஜன்னல்கள் அதிக நேரம் திறந்து வைத்திருப்பதால் வெளியில் உள்ள தூசுகள் அனைத்தும் வீட்டில் விழுந்து கிடக்கும்.
எனவே வீடுகளை தினந்தோறும் பெருக்குவதோடு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வீட்டின் தரைதளத்தை கிருமி நாசினிகளை கொண்டு துடைப்பது அவசியமாகும். வியர்வை அதிக அளவில் வெளியேறும் என்பதால் தலையனை கவர்கள், ஷோபா கவர்கள், பெட்விரிப்புகளை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும்.
ஏசி,ஏர்கூலர் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஜெனரல் சர்வீஸ் செய்வது அவசியமாகும். ஏனெனில் ஏசிக்களில் இன்டோர்மெஷினில் தூசிகள் அதிகம் படர்ந்திருந்தால் போதுமான அளவு குளிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இதனால் மின்சாரத்தின் பயன்பாடு தான் அதிகரிக்கும். எனவே முன்கூட்டியே சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும்.
நன்றி தகவல் முகநூல் (பசுமை புரட்சி)