வழக்கு மொழி கவிதை!!

சுள்ளி பொறுக்கப் போகும்
வெடலைப் பொண்ணே!
காடு உனக்கு புதுசுடி
என்ன செய்வ?

பாத்து பதுவிசா
கத்துகிறேன் ஆத்தா.

நீ போகும் தடமோ
ஒத்தையடி பாதயடி.
பெண்ணே!
கல்லும் முள்ளுந்தேன்
கொட்டிக் கிடக்குது.

பாத, மட்டுமில்ல ஆத்தா,
எங்காலும் பழகிப் போச்சு
நீ கவலப்படாதே.

வெடலைப் பசங்க
எதுக்க வந்தா
ஏறெடுத்துப் பாக்காதே,
கண்ணோ கொள்ளிக்
கண்ணு,
வாயோ வம்பளக்கும்.

நீ வெசனப்படாதே ஆத்தா,
சுள்ளி வெட்டும் கருக்கரிவா
இருக்கு,என்னைக் காக்க
மதுர வீரன் ஒண்டிச்சாமி இருக்கு.

தாகத்துக்கு வாய் தவிச்சா
பொண்ணே என்னடி செய்வ?

ஓடும் சுனையும், கொட்டும் அருவித்
தண்ணியும் இருக்க கவல
என்ன ஆத்தா?

வயிறோ சாண் தாண்டி
பசிக்குமே என்ன செய்வ?

ராவுல மீந்து போன
கம்பகூழும், நீச்சத் தண்ணியும்
கொண்டுபோறேன் ஆத்தா!

சுள்ளி பொறுக்கும் பொது
பொண்ணே!
சுத்தியும் கவனமிருக்கட்டும்,
ஆளரவம் மாதிரித்தேன்
தெரியும் கறுப்புக்
கரடி சலசலப்பு!

கண்ண மட்டுமில்ல ஆத்தா,
காதையும் தொறந்து வச்சிக்கிறேன்.

காத்தோடு இடிமழ
தீடீர்னு வந்துச்சுனா
என்னடி செய்வ எம்பொண்ணே!

மரமட்டையில ஒதுங்க
மாட்டேன் ஆத்தா,
பாறைக்கு அடியில
பதுவிசா ஒண்டிக்கிறேன்
போதுமா!

பொறுக்குன சுள்ளிய
சேத்துக் கட்ட கயறு
கொண்டுபோக மறந்தா
என்னடி செய்வ பொண்ணே!

நூலாங்கொடிதேன் காடுபூரா
வெளஞ்சு கெடக்கே,
அதக் கொண்டு முடுஞ்சு
வாறேன் ஆத்தா!

ஆனையும்,புலியுந்தேன்
அலயுற காடுடி புள்ள,
ரொம்பத் தொலவு உள்ளார
போகாத பொண்ணே!

ஆத்தா சொன்னா சரித்தேன்,
கிட்ட இருந்தே
வெட்டி வாறேன் சுள்ளி.

பொழுதோ பொசக்குனு
விழுந்துடும் புள்ள ,
உல வாய மூட முடியும்,
ஊர் வாய மூட முடியாதுடி புள்ள,
வெரசா வந்துடுடி.

கோழி மச்சு ஏற முன்னே,
ஆடு பட்டி அடைய முன்னே,
நா அடுப்படியில இருப்பேன்
ஆத்தா,
நீ வெசன ப்படாம
ஒஞ்சோலியப் பாரு...!!

எழுதியவர் : messersuresh (18-Apr-13, 10:11 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 136

மேலே