ஐந்து அடங்காக் குதிரைகள்

குறள் தந்த கவிதை-6

அனைத்துக்கும்
ஆசைப்படு என்பார்
ஆபத்தைத் தூண்டுவார்
அவர் அருகில் செல்லாதே.

குதிக்க விட்டு
குண்டலினி யோகம் என்று
அங்கங்கள் குதிப்பதை
ஆனந்தமாய் நாட்டமிடும்
அவர் பார்வையும் வேண்டாமே!

ஆண்டவனைக்
காட்டுகிறேன் என்பார்
அய்யகோ...
அவரே ஆண்டவன் என்பார்
அவர் குரலையும் கேட்காதே

ஆசிர்வாதம் என்று சொல்லி
அசிங்கமாய் அள்ளி அணைப்பார்
அவர் உறவும் வேண்டாமே

கதவைத் திறவுங்கள்
காற்று வரட்டும் என்றே
கட்டி அணைப்பார்
கட்டிலுக்கு அழைப்பார்
கயவர் உறவும் வேண்டாமே

சுகம் தேடும் உடல்
விவாதிக்கும் வாய்
கயமை பேசும் விழிகள்
ஒட்டு கேட்கும் காது
மோப்பம் பிடிக்கும் மூக்கு
இவை ஐந்தும்
ஆசை கொள் உண்ணும்
அடங்காக் குதிரைகள்.
மதமென்னும் போர்வைக்குள்
மறைந்து வாழும் மாயைகள்

அறிவுக்கண் கொண்டு
அவர்களை ஒதுக்கினால்...
அறிவுக்கடிவாளம் கொண்டு
அவைகளைஅடக்கினால்...
வாழ்க்கைப் பயணம்
வழிதவறாமல் செல்லுமே!
..................................பரிதி.முத்துராசன்

கவிதை தந்த குறள்-6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (19-Apr-13, 7:54 pm)
பார்வை : 92

மேலே