இரவு வானத்தின் இனிய தோற்றம்

மின்சாரம் இல்லாத
மிதமான இரவொன்றில்
கோடையின் வெப்பம் எனைக்
கொடுமையாய்த் தாக்கிடவே,

தூக்கம் தொலைத்து நான்
துடிக்கின்ற கொடுமை கண்டு
அருகினில் படுத்திருந்த என்
அழகிய மனைவி சொன்னாள்.

இரவு முழுவதுமாய்
இப்படியே விழித்திருந்தால்
மறுநாள் வேலையெல்லாம்
மறந்தேதான் போகு மென்றாள்!

மின்சாரம் வருவதான
அறிகுறியே இல்லாததால்
சம்சாரம் சொன்னபடி
மொட்டைமாடி நாங்கள் சென்றோம்!

இதமான காற்று வந்து
தடவித் தாலாட்டிடவே
கணநேரம் செல்லு முன்னே,
கண்ணயர்ந்து விட்டோம் நாங்கள்!

நடுசாம நேரத்திலே
நாயொன்றின் குரல் கேட்டு ,
விழித்து நான் பார்க்கையிலே என்
மனையாளும் விழித்திருந்தாள்!

மல்லாந்து படுத்துக்கொண்டு
மலைப்புடன் நான் பார்க்கையிலே ,
அப்போதுதான் பார்த்தேன்
அழகான வானம் தனை!

அலங்காரம் செய்து விட்ட
அங்காடித் தெருவெனவே,
அழகாய் சொலிக்கின்ற
விண்மீன்கள் கூட்டமதை!

கறுப்புப் புடவையினில் செய்த
தங்க வேலைப் பாடுகளாய்க்,
கண் சிமிட்டிய விண்மீன்கள் என் ,
கருத்தினைத்தான் கவர்ந்தனவே!

தொலைவினிலே தெரிந்த சில
விண்மீன் வீரர்கள்,என்
மனையாளைப் பார்த்துப் பார்த்துக்
கண்சிட்டக் கண் சிவந்தேன் !

பொய்க்கோபம் கொண் டவற்றைப்
பொறுக்கிவிட நான் நினைத்துக்
கைகளினால் இயலாதெனக்
கண்களினால் கணக் கெடுத்தேன்!

இரவு முழுவதுமாய்
இவ்வாறு கணக் கெடுத்தும்,
எண்ணவும் முடியவில்லை,என்
எண்ணமும் ஓயவில்லை!

அதிகாலை உதித்திட்ட
அழகான கதிரவனின்
ஆரஞ்சுக் கதிர்கள் பட்டுக்
காணாமல் போய்விடவே,

விட்ட கணக் கதனை ,
விட்டுவிட எண்ணமின்றி,
இரவுக்காய்க் காத்திருக்க
இப்போதே திட்டமிட்டேன்!

எழுதியவர் : கோவை ஆனந்த் (19-Apr-13, 9:03 pm)
பார்வை : 165

மேலே