அன்புள்ளத் தோழிக்கு (அநாதை நண்பனின் அர்த்தக்கடிதம்)

அன்புள்ளத் தோழிக்கு (அநாதை நண்பனின் அர்த்தக்கடிதம்)

அள்ள முடியாத வார்த்தைகளை
விதைத்துவிட்டேன் நான்

உன் மனம் வேகும்
அளவிற்கு பாதித்துள்ளது
என் வசைகள் என்பதை
நன்கு உணர்வேன் நான்

உன் சம்பந்தப்பட்ட எதிலும்
இந்த முன்கோபி நண்பன்
கருத்திடுவதில்லை
என் வார்த்தைகளின் தாக்கம்
உன்னை என்னிலிருந்து
பிரித்துவிடக் கூடாதென்றுதான்

எங்கும் ஒரு புன்னகை
படிவம் உதிர்த்தவனாய்
சிறு விருப்பங்களோடு
நன்றாக இருக்கிறாயா
நான் நன்றாக இருக்கிறேன்
என்று விலகியே போகிறேன்

நீ ஏனென்று கேட்டபொழுதெல்லாம்
காரணமில்லாமல் விலகினேன்
மௌனம் சாதித்தேன்
விளையாட்டை விதைத்தேன்

எதையுமே உன்னிடம்
பகிர்ந்துக்கொண்டு செய்யும்
நான் செய்தது பெரும்தவறு
உன்னிடம் கேட்ட பின்பே
நுழைந்திருக்க வேண்டுமுன் செயல்களில்

என் செய்கைகள் பிழையென்று
கூறுவதைவிட பேசிய முறைகள்
முறையற்றதாகிவிடவே தான்
உன்முன்னால் குற்றவாளியாய் நிற்கிறேன்

மன்னிப்பு கேட்க போவதில்லை
ஊற்றிய தீக்குழம்புகளை கேட்கின்ற
மன்னிப்பில் ஆற்றிவிடமுடியாது

உன் எண்ணப்புகைச்சலில்
இவனின் வார்த்தை வாடைகள்
ஒரு பிசுகாகவே ஒட்டி வாசமடித்து
கொண்டேதான் இருக்கப்போகிறது

தொடர்பிலிருந்து விலகிவிடு
என்றவனின் தொடர்பே
வேண்டாமென்று சென்றுவிட்டாயா

தொடர வேண்டுமாய் துடிக்கிறது
தொடருறக்கங்கள் இன்றி
நீரிழை இமைகளை பிரிந்துனை
தேடுமென் கருவிழிகள்
தண்ணீரிழந்த மீனாய் வாடி

அருகதையற்றவனின் இதயத்தை
தண்டிக்கிறேன் என்றவள்
துண்டித்துவிட்டாய்
உன் மௌனக்கூர்வாளால்

பெற்ற வார்த்தைவரங்களை
உனக்கெனவே தாரை வார்க்கிறேன்
வன்மையால் கொன்றுவிடு
வாயடைத்து செவிகொடுக்கிறேன்
நீ திருப்பியடிக்கும் விசைதனில்
வலியின்றி சிரித்துவிடுகிறேன்

அள்ளி முடித்த
மல்லிகைச்செண்டாய்
அவளின் நட்பு
அள்ளித் தெளித்தேனதில்
அரளிப்பூச் சாற்றை

கைப்பிடி உணவும்
கழுத்தை அடைக்கிறது
கண்ணீர் முட்டிக்கொண்டு
இனி அழுதென்ன லாபம்

கௌரவப்படுகிறேன்
கௌரவக்காரியை தோழியாய்
அடைந்தமைக்கிந்த அநாதை நண்பன்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (21-Apr-13, 5:36 am)
பார்வை : 170

மேலே