பூமி வெடித்து சிதறட்டும்....
பெண் இல்லையெனில்
பொன்னான இந்த பூமியில்
மனித இனம் இருக்காது.
பெண்ணின் வயிற்றினுள்
சிசுவாய் வசித்தவனே
பெண்மைக்கெதிறாய்
வன்கொடுமைகள் நீ
செய்வதும் ஏனோ.. ?
பெண் என்பவள் பொம்மையா?
ஆண்களால் ஆட்டுவிக்கப்படும்
சமயத்தில் அகோரமாய்
அழிக்கப்படும் நாங்கள்
என்ன ஊமையா...?
அமில வீச்சில்
அழகான முகங்கள் சிதைந்து
துடித்து இறந்த வினோதினி
திவ்யா என்று பட்டியல்
நீண்டுகொண்டே உள்ளதே தவிர
நின்றபாடில்லை- அக்கொடுமைகளை
முழுதும் நிறுத்தவும் இயலவில்லை...
ஐந்து வயது முதல்
ஐம்பது வயது வரை
எவரையும் விட்டு வைக்காத
ஆண் மிருகங்களே...
என் கைகளில்
தீக்குச்சி இல்லை
எரித்து சாம்பலாக்கிட,
வாள் இல்லை
சிரம் கொய்து
சினத்தை தீர்த்துக்கொள்ள,
அதிகாரம் இல்லை
தூக்கில் போட ஆணையிட,
ஆதலால் இங்கே
வாரி இறைக்கின்றேன்
வார்த்தைகளை....
தவறான பார்வைகளாலும்
மதிகெட்ட வார்த்தைகளாலும்
அத்து மீறிய கேலிகளாலும்
கிண்டல்களாலும் தீண்டல்களாலும்
பாலியல் வன்கொடுமைகளாலும்
மனம் வெந்து, நொந்து
வேதனையோடு மடியும்-அபலை
பெண்களின் உயிர்கள் இப்பூமியிலே
தொடர்கதையாய் நீடித்திருப்பின்.....
மலர்கள் கருகட்டும்
மரங்கள் தீப்பிடித்து எரியட்டும்
முக்கடல் பொங்கட்டும்
மலைகள் வெடித்து சிதறட்டும்
காற்று வீசுவதை நிறுத்தட்டும்
மூவுலகும் அழியட்டும்
காரிருளில் மூழ்கி- இந்த
பூமியும் வெடித்து சிதறட்டும்.
-PRIYA