மரத்துக்கு மரணம் கிடையாது

குறள் தந்த கவிதை-10

அந்தப் பட்டமரத்தை
பார்க்கும் போதெல்லாம்
பதைபதைக்கும் நெஞ்சம்

எத்தனை நாட்கள்
அதன் நிழலில் நின்றிருப்பேன்...?
எத்தனை நாட்கள்
அதன் இலைகள்
காற்றோடு கவிபாடுவதை
கேட்டுத்தான் மகிழ்ந்திருப்பேன்...?

மீண்டும்
அந்த மரம் தளிர்க்காதா...?
அதன் நிழல் கிடைக்காதா...?

அதன் ஆணிவேர் ஆழமாக
ஜீவ நீருக்காக அலைவது
யாருக்கும் தெரியாதோ..?.
காலம் வரும் வரை
காத்திருப்பதும்
யாருக்கும் தெரியாதோ...?

நேற்று பார்க்கும் போது
எந்த மரவெட்டியோ...
அடிமரத்தை விட்டுவிட்டு
அத்தனையையும் வெட்டிவிட்டான்

ஆனாலும்...
அந்த மரம் அழியவில்லை
இன்று பார்க்கும் போது
இலைகளோடு தளிர்விட்டபடி
இளமையோடு துளிர்விட்டபடி

அட..
இந்த மரத்துக்கு இருக்கும்
மனத்திடம்கூட
மனிதன் எனக்கு இல்லையே!

நாலு மனிதர்களுக்கு
நிழல் தரும் மரமாக
நாளை நான் பிறக்கவேண்டும்

இறக்கும் முன்
எண்ணிப்பார்க்க வேண்டும்
எத்தனை மரங்கள்
இதுவரை நாட்டினேன் என்று...

மரத்துக்கு மரணம் கிடையாது
மரங்களை பேணிகாக்கும்
மனிதர்களுக்கும் மரணம் கிடையாது

............பரிதி.முத்துராசன்

கவிதை தந்த குறள்-10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (21-Apr-13, 4:33 pm)
பார்வை : 54

மேலே