சின்னச் சின்ன மலர்கள்

வறுமை கொடுத்த
விரிப்பில்
வசதியாய்ப் படுத்து
அண்ணந்து பார்த்து
ரசித்துக் கொண்டிருக்கும்
ஏழையின்
குடிசையின் மேற்கூரைகூட
அவனுக்கு
நட்சத்திர வானம் !
****
சோதனையெனும்
மாய இருள்
சூழ்வதற்கன்று
ஆதவனின் மறைவு
அடுத்த விடியலுக்கான
ஆயத்தம் அது !
********
சூரியனுக்கும்
வெட்கம் இருக்கும்போல
இரவுத்திரை போட்டு விட்டுத்தான்
குளிக்கப் போகிறான்
மேற்குக் கடலில் !
******