கருவறை முதல் முதியோர் இல்லம் வரை...!!!

தவமாய் தவமிருந்து,
தன்னை இழக்க துணிந்து,
வரமென வரப்போகும் பிள்ளைக்கு,
கருவறையும் இருள் என யாரோ சொல்ல
கண் மூடாமல் வயிறு தடவி,
தூங்க வைத்த தாய்க்கு எப்படி தெரியும்
பின்னால் நாம் தூங்க போவது
முதியோர் இல்லமென்று...????

மார்பில் எட்டி மிதித்து,
முகத்தில் எச்சில் உமிழ்ந்து,
தோளில் ஆடை நனைத்து,
இது என்ன,அது என்னவென்று
கேள்வி கேட்டு நச்சரிக்கும் போதும்
சிரித்துகொண்டே பதில் சொன்ன
தந்தைக்கு எப்படி தெரியும்
பின்னால் மகன் கேட்க போகும் கேள்விகள்
அவ்வளவு கொடுமையென்று..???

தன் பிள்ளை உண்பதற்காக
உண்ணா நோன்பு கொண்ட
தாய்க்கு எப்படி தெரியும்,
பின்னால் சுவைக்க போகும்
முதியோர் இல்லத்து உணவின் சுவை..???

தன் பிள்ளை நடக்கவும்,
மிதிவண்டி பழகவும்,
நீச்சல் அடிக்கவும்,
கை கொடுத்த தந்தைக்கு எப்படி தெரியும்
பின்னால் நம் கை பிடிக்கபோவது
மரக்கை தானேயன்றி மகன் கையல்ல என்று..??

பிள்ளைகளின் வாழ்வுக்கு
தன் வாழ்வை அர்ப்பணித்த தாயையும்,
பிள்ளைகளின் கனவுக்கு
தன் உயிரில் வெளிச்சம் தந்த தந்தையையும்,
வீடெனும் சொர்க்கத்திலிருந்து
வேறுடன் உயிருடன் பிடுங்கி,
முதியோர் இல்லமெனும் நரகம் தேடி
விதைக்க போகும் ஈரமில்லா பிள்ளைகளே,
ஒன்றை தெளிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கும் முதுமை வருமென்று..!!!

உங்களால் முடியுமெனில் முதியோர்களை
குழந்தை போல் கொஞ்ச வேண்டாம்,
குற்றவாளியாக்கி கொன்று விடாதீர்கள்..!!

எழுதியவர் : மனோ ரெட் (24-Apr-13, 4:41 pm)
பார்வை : 215

மேலே