தண்ணீரிலும் ஒரு கண்ணீர் கதை

கெண்டை மீன் ஓடைக்கு அருகில் ஆழ்ந்த கவலையுடன் அமர்ந்து என் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத அந்த துயரச் சம்பவத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது ஏதோ முணுமுணுக்கும் சந்தம் கேட்டது. உடனே விழிகள் அங்கும் இங்கும் தேடலில் ஈடுபட ஆரம்பித்தன. ஒன்றுமே தென்படவில்லை. சற்றுநேரத்தின்பின் அருகிலிருந்த ஓடையை நோக்கி எனது பார்வை திரும்பியது.

ஓடைக்குள் இருவர் அழுதுக் கொண்டிருந்தாலும், கண்ணீரும் தண்ணீர் என்பதால் அது விளங்கவில்லை. இரண்டு மீன்கள் இவ்வாறு கண்ணீருடன் சோக மொழி பேசிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

உடனே என்னை அறியாமலேயே ஓடைக்குள் இறங்கினேன். அச்சத்தால் மீன்கள் ஓடி ஒளிந்துவிட்டன. ஆனால், நான் ஓடையிலிருந்து வெளியேறவில்லை. அந்த மீன்கள் எங்கு ஒளிந்திருக்கின்றன என்பதை அறிய முற்பட்டேன்.

மீன்களை தேடி எனது கண்கள் வலைவீச, அங்கு நடந்த சம்பவமொன்று என்னை கதிகலங்கவைத்தது. ஏற்கனவே சோகத்தில் காணப்பட்ட என் இதயம் மேலும் சோகத்தில் ஆழ்ந்தது.
என்னடா மீன் கதை சொல்லி அலட்டல் விடுகின்றான் என நினைக்கின்றீர்களா? அதுதான் இல்லை. அங்கே நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்துகொண்டால் உங்களுடைய கண்கள்கூட கண்ணீர்குளமாகலாம்.

அப்படி அங்கு என்னதான் நடந்தது? இனியும் நான் மௌனம் காக்க விரும்பவில்லை. கண்ணீர் வருகின்றது..... இருந்தாலும் பராவாயில்லை உங்களுக்காக சொல்கின்றேன்.

அந்த மீன்கள் இரண்டும் பேசிக்கொள்வதை உன்னிப்பாக செவிமடுத்தேன். தாய் மீனும், மகன் மீனுமே பேசிக்கொண்டிருக்கின்றன என்பதை அவற்றின் உரையாடல் மூலம் உறுதியாக ஊகித்துக்கொண்டேன்.


அப்போது, அந்த தாய் மீனிடம், ' அம்மா... அம்மா.. சரியானமாதிரி பசிக்குதே... அப்பா இப்ப வாரேனு சொன்னாரு இன்னும் காணவில்லையே.... எத்தன மணிக்கு வருவாரு? தங்கையும் அப்பாவோட போய்ட்டா அம்மா.... " என்று அந்த மகன் மீன் மழழை மொழி பேசிக்கொண்டிருப்பது என் காதுகளுக்கு எட்டியது.

கைகள் இல்லாததால், தனது வாயால் மகன் மீனின் தலையை தடவி, கொஞ்சம் பொறுடா ராசா... அப்பா இப்போ வந்துடுவாரு என தாய் மீன் அன்பு மொழி பேசுவதும் எனக்கு கேட்டது.

உணவுதேடி ஓடையின் நடுப்பகுதிக்கு சென்றிருந்த தந்தை மீனும் தங்கை மீனும் நீண்டநேரமாகியும் இருப்பிடம் திரும்பவில்லை. இந்நிலையில், மகன் மீன் பட்டினியால் துடிக்க, கணவனுக்கும் பிள்ளைக்கும் என்ன நடந்தது என தெரியாது பதற்றத்தில் துடிக்கிறது தாய் மீன்.

ஒருபுறம் பட்டினியால் துடிக்கும் மகனை ஆறுதல் படுத்துவதற்காக, கண்ணா பொறுடா என தாய் மீன் மனதுக்குள்ளிலிருந்து அன்பு வார்த்தைகள் வந்தாலும், மறுபுறத்தில் ஐயோ ... ஐயோ ...என புலம்புவது எனது செவிகளுக்கு வந்தடைந்தது. நேரம் காற்றாய் பறந்தது. சென்றவர்கள் மீண்டும் வரவில்லை.


அவ்வேளையில், ஓடை வழியாக சென்றுக்கொண்டிருந்த மீனவர்கள் இருவர், இன்றைக்கு பரவாயில்லை. ஐந்து... ஆறு.. கிலோ வரும் என மகிழ்வுடன் பேசிக்கொண்டுசெல்வது என் காதுகளுக்கு கிட்டியது. ஐயோ! .... பாவம்... மீனவனொருவன் போட்டவலையில் உணவுதேடிச் சென்ற தந்தை மீனும் மகள் மீனும் சிக்கிவிட்டனர் என்பதை அப்போது என்னால் ஊகிக்கமுடிந்தது.

இறைவா?... உணவு தேடிச் சென்ற மீன்களுக்கு ஏன் இந்த கதி? ஐயோ. ... பாவம்.. . இவர்கள் இருவரும் இனி என்னசெய்யப்போகின்றார்கள் என எனக்குள் நானே கேள்வி எழுப்பிக்கொண்டேன். கண்களும் அவ்வேளையில் கண்ணீர் குளமாக மாறியது.

இந்த துயரச் சம்பவத்தை அறிந்திராத தாய் மீனும் மகன் மீனும் போனவர்கள் உணவுடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஓடைக்குள் அங்குமிங்கும் பட்டினியால் ஓடித்திரிந்தன. சோகத்தில் இருந்த நான் கண்ணீரை துடைந்துக்கொண்டு திரும்பிபார்க்கிறேன்... திடீரென பறந்து வந்த கொக்கு, ஓடையில் இருந்த மகன் மீனை கௌவிக்கொண்டு பறந்துச்செல்கிறது.செய்வதறியாது நான் திகைத்துநின்றேன்.... சோ.. சோ.. என கொக்கை மிரட்டினாலும் அது பயப்படவில்லை. நீண்டதூரம் பறந்துச் சென்றுவிட்டது.

மகன் மீனின் பிரிவால் தாய் மீன் அம்பு பட்ட மான்போல துடிதுடிக்கின்றது. ஓடைக்குள் அங்கும் இங்கும் ஓடிச்சென்று கதறி அழுகின்றது..... அந்தோ பரிதாபம்.... எவரும் திரும்பி வரவில்லை.
அப்போது ஓடைக்குள் திடீரென ஏதோ விழுந்தது.... கொக்கு கௌவிச்சென்ற தனது மகன் மீனாக அது இருக்குமோ என்ற அவாவுடன் ஓடிச்சென்று அதை தாய் மீன் கௌவையில் ஓடைக்கு மேல் தூண்டிலுடன் இருந்த சிறுவன் அதை மேலே இழுத்தெடுக்கிறார். தூண்டிலில் அகப்பட்ட தாய் மீன் துடிதுடிதவாறு மேலேச் செல்கிறது.

நடந்த சம்பவங்களைப் பார்த்தப்பிறகு நான் கண்ணீருடன் வீட்டுக்கு திரும்பினேன். சோகத்தால் அமைதியை தேடி ஓடைக்குச் சென்றிருந்த நான் மேலும் சோகத்துடன் அன்று வீடுதிரும்பினேன். அதிலிருந்து இன்றுவரை மீன் சாப்பிடுவதை தவிர்த்துக்கொண்டேன். தண்ணீருக்குள்ளும் இவ்வாறு பல கண்ணீர் கதைகள் இருக்கின்றன என்பதையும் அறிந்துகொண்டேன்......
கற்பனைக் கலந்த இந்த சிறுகதையை வாசித்ததில் உங்களுக்கு பயன் ஏதும் இல்லையேல் மன்னிக்கவும்...

இரா. சனத்
கம்பளை

எழுதியவர் : இரா. சனத் கம்பளை (28-Apr-13, 10:37 pm)
சேர்த்தது : raasanath
பார்வை : 276

மேலே