சாயம்போன வானவில்...!

இலை உதிர்ந்த நிர்வாண
மரமாகிறாள்-விலைமகள்
ஜல்லடை கண்கொண்ட தேகத்தில்
உயிருடன் பிணமாகிறாள்...!

வசந்தகாலம் வருவதற்கு
வாய்புகள் இல்லை-என்னாளும்
அவளது வாழ்க்கையில்
இலையுதிர்காலம்
முடிவதும் இல்லை...!

இரவுகள் தொடர்ந்திடும்
தொல்லை - அவளது
வானம் எப்போதும்
விடிவதுமில்லை...!

மனதை கொன்றுவிட்டு
அவளை தின்றுவிட்டு
ரத்தகவுச்சியோடு மேலும்-கீழும்
நாக்கை சுழற்றி நடக்கிறது
விபச்சார மிருகம்...!

"எவனுமே இராமன் இல்லை"என
சொல்லி சொல்லியே அதன்
தலையை தடவிக்கொடுத்து
வளர்த்து வருவது நம்
சமூக அவலம்...!

நேற்று ஒருவன்,
இன்று ஒருவன்,
நாளை ஒருவன் என
மாற்றி-மாற்றி
கசக்கப்படும் பூ-விலைமகள்...!

கடவுளால் கைவிடப்பட்டவள்-அவள்
கரன்சி நோட்டுகளால்
தன் காயங்களை மறைப்பவள்...!

சபிக்கப்பட்ட பெண் -அவள்
சருகுகள் உடலோடு
சாயம்போன வானவில்...!

எழுதியவர் : மீனாட்சி.பாபு (8-May-13, 2:22 am)
பார்வை : 66

மேலே