பெற்றோர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்!!
நேற்று நடந்த ப்ளஸ் டு தேர்வு முடிவுகளைப் பார்த்தோம்! நம் மாணவச் செல்வங்கள் அருமையான மதிப்பெண்களைப் பெற்று சாதித்திருப்பது பாராட்டுக்கு உரிய விடயம்.அனைவரும் பாராட்டுவோம்!
இந்த வேளையில் பெற்றோர்களுக்கு ஒரு அன்புவேண்டுகோள்!
இந்த வருடமும் வழக்கம்போல் நாமக்கல் பகுதி மாணவர்களே மதிப்பெண்களில் முன்னுரிமை அடைந்திருப்பதை பெற்றோர்கள் கவனித்திருப்பீர்கள்.
உடனே உங்கள் குழந்தைகளையும் இந்த மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க ஆவலாய் இருப்பீர்கள். செலவு அதிகமானாலும் பரவாயில்லை.எப்படியாவது இந்த மாதிரிப் பள்ளிகளில் சீட்டு வாங்கிவிட ஆவலாய் இருக்கிறீர்கள்!
பெரு முயற்சி செய்து மாநிலத்திலேயே முதலிடம் வாங்க வைத்த பள்ளி ஆசிரியர்களை வாழ்த்துவோம்!
நமக்கெல்லாம் இந்தப் பள்ளி மாணவர்கள் ஓரிருவர் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்றதுதான் தெரியும். இதே பள்ளிகளில் படித்து குறைந்த மதிப்பெண்கள் பெற்று இன்று வருத்தத்தில் உள்ள மாணவர்களைப் பற்றியோ,பெற்றோர்களைப் பற்றியோ நாம் யாரும் யோசிப்பது கூட இல்லை.
இந்த மாதிரி போர்டிங் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மனதளவில் மிகுந்த வேதனைகளோடுதான் படித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை வாயிலாகத் தெரிவிக்க விரும்புகிறேன்! இந்தப் பள்ளிகளில் மாநில அளவில் மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று ஒரு சில மாணவர்களைத் தயார்படுத்தும் ஆசிரியர்கள் அவர்களைக் கூட மதிப்பெண் வாங்கும் இயந்திரம் போன்றே கையாள்கின்றனர்.
புரிந்து படிக்கும் ஆற்றல் இல்லாதவர்களாக வளர்க்கப் படும் இவர்கள் புத்தகத்தில் ஆசிரியரால் சுட்டிக் காட்டப் படும் விடைகளை மட்டும் பலமுறை மனப் பாடம் செய்து எழுதி வரும் இவர்கள் எந்தப புதிய புத்தகங்களையும் படித்து புதிய செய்திகளை அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்த மாதிரிப் பள்ளிகளில் மிகுந்த செலவு செய்தும் நிறைய மாணவர்கள் சராசரி மதிப்பெண்களை எடுத்துப் பெற்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைதிருக்கின்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருமுறை விடுதியில் சேர்த்து விட்டால் குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ,ஆசிரியர்களாலும்,பெற்றோர்களாலும் விடுதியிலேயே தங்கிப் படிக்க மாணவர்கள் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் .இது போன்ற
விருப்பமின்றி விடுதியில் தங்கும் மாணவர்கள் மனதளவில் மிகவும் காயம் படுகிறார்கள்.மேலும் நன்றாகப் படிக்கும் மாணவர்களிலிருந்து படிக்காத மாணவர்களை பிரித்து வைக்கின்றார்கள்.படிக்கும் மாணவர்களுடன் அவர்களைப் பேசக் கூட அனுமதிப்பதில்லை.ஒரே பள்ளியில் இருந்து இங்கு வந்து வேறு வேறு வகுப்புகளில் மாட்டிக் கொண்ட இந்தக் குழந்தைகள் மனதளவில் மிக மிக பாதிப் படைகிறார்கள். இப்படிப் பட்ட மாணவர்களால் என்ன சாதித்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்?
உங்கள் குழந்தைக்கும் வேண்டுமா இது போன்ற நிலைமை?
மேல்நிலை வகுப்புகளைப் பொறுத்த வரை அனைவருக்கும் ஒரே புத்தகங்கள்தான்.ஒரே மாதிரி வகுப்புகள்தான் நமது அரசுப் பள்ளிகளிலேயே நன்றாக சொல்லித்தருகின்றார்கள். மிகச் சிறந்த ஆசிரியர்களும் இருக்கின்றார்கள்.குழந்தைகளையும் கஷ்டப் படுத்துவதில்லை.எனவே உங்கள் குழந்தைகளை செலவின்றி அரசுப் பள்ளிக்ளிலேயோ,அரசு உதவி பெரும் பள்ளிகளிலேயோ சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
குறிப்பாக இந்த மாதிரிப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புப் பாடங்களோ,பதினொன்றாம் வகுப்புப் பாடங்களோ எடுக்கப் படுவதே இல்லை.செய்முறை வகுப்புகளுக்கும் தொடர்ச்சியாக அழைத்துச் செல்வதில்லை.கடைசி ஒரு வாரத்தில் பயிற்சி கொடுத்து செய்முறைத் தேர்வுக்கு அனுப்புகிறார்கள். இந்தமாதிரி தொடர்பில்லாமல் படிக்கும் மாணவர்கள் பொறியியல் வகுப்புகள் சென்று கண்டிப்பாகத் திணறி விடுவார்கள்.
ஒன்பதாம் வகுப்போ,பதினொன்றாம் வகுப்போ படிக்காத மாணவர்கள் எப்படி நிறைவான கல்வியைப் பெற்றவர்களாவார்கள்?
மற்ற பள்ளிகளின் மீது ஏகப்பட்ட கட்டுப் பாடுகளைப் போடும் நம் அரசு அதிகாரிகள் இந்த மாதிரிப் பணக்கார கல்வி நிறுவனங்களையும் அவற்றில் நடக்கும் இந்த மாதிரிக் குறைபாடுகளையும் கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை.
நாம்தான் நம் குழந்தைகளின் எத்ர்காலம் பற்றித் தீர்மானிக்கவேண்டும். எனவே சிந்தித்து செயல் படுங்கள்.யாரோ சொல்கிறார்கள் என்பதற்காகவோ,மற்றவர்கள் சேர்த்து விட்டார்கள் என்பதற்காகவோ இம்மாதிரிப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை சேர்த்துவிட்டு பிறகு துன்பப் படாதீர்கள்.
தயவு செய்து உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலோ,அரசு உதவி பெரும் பள்ளிகளிலோ சேர்த்துவிட்டு ,கஷ்டமான பாடங்களுக்கு மட்டும்,குழந்தைகள் விரும்பினால் தகுந்த சிறப்பு வகுப்புகள் அமைத்துக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்.உங்களுக்கு செலவும் கணிசமாகக் குறையும்.