உண்மை கேள்! உள்ளன்பு காண்!!( அஹமது அலி)
ஆயிரம் உறவுகள்
எனக்கிருந்தும்-அன்பே
உன் உறவில் தான்
உள்ளம் மலர்கிறது!
பொய்யான உறவிலும்
மெய்யான உள்ளன்பு காண்
பொய்யான உறவை
மெய்பிக்கும் மெய்யறிவு கண்டு
மெய்பிக்க பொய்யில்லையே
உதறிச் செல்வது உறவு
உயிரை தருவது அன்பின் வரவு
வரவா? உறவா?
உறவும் வரவா?
பிரிவை தந்து
உடலையும் உறவையும்
பிரித்திட ஆகும்
பிரிவைத் தந்து
நினைவை பிரிக்க ஆகுமா?
அன்னையின் முந்தானை
பி(க)டித்துத் திரியும்
அறியாக் குழந்தை
அன்னையை பிரியுமா?
முந்தானையையும் விடுமா?
நான் இன்னும் குழந்தை தான்
நீயும் எனக்கு அன்னை தான்
தவறிழைத்தாலும்
தண்டனை ஏற்றாலும்
உன் மடி தானே என் மேடை.
நீ அன்பு மிகைத்தவள்
அத்தனை அன்பையும்
எனக்கே கொடு என்பது
சுயநலம் தான் -என் செய்வேன்
பகிர்ந்திட பதைபதைக்குதே!
நீ இரக்கம் மிகுந்தவள்
என்னிடம் மட்டும் அரக்கியாய்
வீதியோர பிச்சைக்காரானுக்கு
பசியாற உணவளிக்கிறாய்
உன் கூடவே வருகிறேனே
சாப்பிட்டாயா என
ஒப்புக்காவது கேட்கிறாயா?
என் குற்றங்களை மட்டுமே
எப்போதும் பட்டியலிடுகிறாயே
என்றாவது எனையழைத்து
பாராட்டி ஒரு வார்த்தை
பகர்ந்ததுண்டா?
மழை பெய்யும் வேளையொன்றில்
என் குடை பிடுங்கி
எவருக்கோ பிடித்தாய்
உன் மனிதாபிமானம் மெச்சினேன்
உன்னோடு நானும் சேர்ந்து
காய்ச்சலில் படுத்தபடியே!
உன்னைப் பார்க்கும்
கண்ணாடி நான் என்பது
அறியாதவளாய் அடிக்கடி
என் முன்னே
எனை பார்க்க வந்து
யாரையோ பார்த்து
ஏமாந்தும் போகிறாய்!
இரக்கம் வர சொன்னால்
உனக்குப் பிடிக்குமே
என்பதற்காகவே சொல்கிறேன்
இரக்கம் வருமா?
வசை மொழி வருமா?
எது வரினும் அது
உன் அன்பையே சொல்லும்
எப்போதும் அது எனை வெல்லும்!