பொழில் நாட்டு இளவரசி ----அஹமது அலி-----

படையணி புடைசூழும் படுகளம்
பரிவாரம் நிறைசூழும் பட்டயம்
♡ ♧ ✦ தொடுவானம் தொடுமளவு படைஞர்
♡ ♧ ✦ தொடமுடியா கோட்டைக்குள் எம்பிராட்டி!


சிறைபட்ட சிறுமலராய் சீமாட்டி
சிக்கி உழன்றனள் சினவரால்
♡ ♧ ✦ மீளாத் துயர் மீளாது மீன்விழியாள்
♡ ♧ ✦ மீட்க மீளி வரும் திசை நோக்கினள்!


ஓடுமுகில்களை ஓதி அழைத்தாள்
ஓலை அனுப்பிடத் தூது விடுத்தாள்
♡ ♧ ✦ மாலை மங்கிடுமென அச்சம் பெருகியே
♡ ♧ ✦ மலையனின் நினைவில் உச்சம் உருகினாள்!


சூள்மேவி சூல் கலங்கித் துடிக்க
சூம்பித் தேகம் சுக்கெனச் சுருங்க
♡ ♧ ✦ சூழ்செய்ய சுயசிந்தனை மறுத்திட
♡ ♧ ✦ பாழ்வதையில் பால்மனம் வாடினாள்!


பொழில்நாட்டு எழில் இளவரசி
மகிழ்விட்டு வேடவர் கூட்டினிலிங்கே
♡ ♧ ✦ மலையநாட்டு மாமள்ளன் மலையன்
♡ ♧ ✦ இளைய வேந்தன் இதையறிந்தானே!


அக்கணமங்கே ஒற்றன் வாய்மொழியால்
இக்கணமிங்கே சிறையுடைக்க சீறினான்
♡ ♧ ✦ சிக்கனமான நாழிகையில் சீக்கிரமே
♡ ♧ ✦ சிக்கனவாய் மீட்க சூளுரைத்தான்!


சிங்கநாதமிட்டே பெருஞ்சேணை பெருக்கியே
சிங்க திசை நோக்கி சீறிப் பாய்ந்தான்
♡ ♧ ✦ பாய்மாக்களின் பாய்ச்சலில் புழுதி பறக்க
♡ ♧ ✦ பாத்தியப் பாவை மீட்கப் பறந்தான்!


பொட்டல் பெருவெளியில் பெரும்படைகள்
பொருதிப் பெரும்போர் மூர்க்கமாய் மூள
♡ ♧ ✦ பொறியாய் வாளொளி வானில் பறக்க
♡ ♧ ✦ பொடித்தான் எதிரணிப் படைகளை!


கோட்டை தகர்க்க களிறுடன் முன்னேறி
நாட்டைப் பிடித்து நாயகியை விடுவித்தான்
♡ ♧ ✦ வெற்றி வேட்டுகள் ஒலி விண்பிளக்க
♡ ♧ ✦ வெள்ளிப் புன்னகையில் முறுவலித்தான்!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (13-May-13, 7:40 am)
பார்வை : 1817

மேலே