பக்தியெனும் பலவீனம் !!

முக்தியை விளக்குவார்
பக்திக்குள் ஒளிந்திருப்பார்.
யுக்தி அது கொண்டிடுவார்.
சக்தியின் வேடங்கொள்வார்.

மாலைகள் சூடுவார்
மந்திரங் கூறுவார்.
சேலைகள் கண்டாரானால்
சிங்காரம் பாடுவார்.

பாவிகள் கூடுவார்
தேவிகள் ஆடுவார்.
ஆவிகள் விரட்டுவதாய்
கோபியரைக் கொஞ்சுவார்.

சாந்தி கிடைக்குமென்பார்.
சர்வமும் நானென்பார்.
வாந்தி எடுக்கவைத்து
வரிசையாய் சமாதிவைப்பார்.

காவடி தூக்குவார்
காவியும் உடுத்துவார்.
சேவடிகள் சேவிக்க
சேத்திரங்கள் செல்லுவார்.

ஆவதும் அதனாலே
ஆயிரம் உண்டென்றால்
போவதும் சில லட்சம்
போக்கியும் வாரிடுவார்.

கருநாவிற் கடவுளின்
திருநாமம் செப்புவார்.
உருவாக்கிக் கூட்டத்தை
ஊரறிய திரட்டுவார்.

தெருக்களில் பாடச்செய்வார்
திருப்பணி மயக்கிவைப்பார்.
விளம்பரம் ஆக்கிக்கொள்வார்
வருமானம் பெருக்கிச்சேர்ப்பார்.

கோடிகளாய் செல்வங்கள்
குவியுது போலிகளிடம்
பக்தியெனும் பலவீனம்
பயன்படுத்தும் தந்திரம்...

படித்த முட்டாள்களும்
பாசாங்கை நம்பும் வரை
கருத்த பாவங்களும்
வேசமிட்டு ஆடாதோ!

இடிந்த கோவில்களாய்
இதயங்கள் இருண்டதால்
உணர்ந்த பக்தி மெய்யும்
உள்நுழையக் கூசாதோ!

மனிதரின் நம்பிக்கையை
மயக்கமென எண்ணியே
புனிதராகும் வேடத்தையும்
பொறுப்பானோ மெய்யோனும் !

எதுவரை போகுமோ
அதுவரை போகட்டும்!
வேடங்கள் கலைவதற்கும்
வெகுதூரம் இல்லையே!!.


சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா,

எழுதியவர் : சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா. (16-May-13, 9:14 am)
பார்வை : 148

மேலே