*நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.*
இன்றைய சமுதாயத்தில் பிறந்த மழலை முதல் தள்ளாடும் முதியவர்கள் வரைப் பலரும் பல்வேறு விதமான நோய்களால் அவதி உறுகின்றனர். இந்நிலைக்கு .முக்கியக் காரணம் முறையல்லாத உணவு முறைப் பழக்கங்களும்,மது, மாது, புகைப் பிடித்தல் போன்ற தீயப் பழக்கங்களுமே எனத் திட்டவட்டமாகக் கூறலாம்.
நோயற்ற வாழ்வு வாழ. இறைவன் கொடுத்த இப்பூத உடலைப் பேணிக் காக்க சித்த மருத்துவர் களும் ஆயுர்வேத மருத்துவர்களும் தனது ஆய்வுகளை, எண்ணிலடங்கா வழிமுறைகளாகக் தங்களதுக் கருவூலங்களில் சேமித்து நமக்கு வாரி வழங்கி உள்ளனர்... அவற்றில் நம்மால் இயன்ற ஒரு சிலவற்றையேனும் நடைமுறையில் பின்பற்றி வந்தால் நலமுடனும் வளமுடனும் வாழமுடியும் என்பது திண்ணம்.
இக்கட்டுரையில் முக்கியமான இரு உறுப்புகளைத் தாக்கும் நோய்களையும் அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழிமுறையினையும் சித்த ஆயுர் வேத நூல்களில் உள்ள கருத்துகளின் அடிப்படையிலும் , அறிஞர் அண்ணா சித்த மருவத்துவ மனையில் இயங்கிவரும் இயற்கை மருத்துவப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளின் அடிப்படையிலும் அடியேன் சிற்றறிவிற்கு எட்டியவரை இயன்ற அளவிற்குத் தொகுத்தளிக்க முயன்றுள்ளேன்..
கருப்பை:நோய் -
மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந்தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக்தியின் அற்புதம் இது!
கிட்டத்தட்ட முக்கோண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண்டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொடங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப்பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அதுபோல் சற்று கடினமாகத் தெரியும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப்பார்த்தால் நமது உதடுகளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடியும்.
கருப்பை தசைகளால் ஆனது. அதன் உள்ளே ரத்தக் குழாய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப் பையில் இருந்து சினை முட்டை முதிர்ந்து- வெடித்து- வெளியேறி கருக்குழாயில் உயிரணுவை சந்தித்து, அங்கேயே கருவாகி, அது சில ரசாயனங்களை வெளிப்படுத்தும். அந்த ரசாயன மாற்றங்களால் கரு நகர்ந்து, 5-வது நாள் கருப்பைக்குள் சென்று, அங்கேயே ஒட்டி வளரத் தொடங்கிவிடும். கருவை வளர வைப்பது எண்டோமெட்ரியத்தின் வேலை. முதலில் சிறிதாக இருக்கும் எண்டோமெட்ரியம், பின்பு வளர்ந்து 9 மி.மீ. அளவை எட்டும்.
வயதுக்கு வந்த எல்லா பெண்களுக்கும் மாத விலக்குக்கு முந்தைய நாள்வரை எண்டோமெட்ரியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். உடலுறவு நிகழ்ந்து உயிரணு சென்று- சினை முட்டையும் வெளியேறி வந்து- இரண்டும் சந்தித்து கருவாக்கத்திற்கான செயல்கள் நிறைவேறா விட்டால் இந்த எண்டோமெட்ரியத்திற்கு கருப்பைக்குள் வேலையில்லை. அதனால் அது வெடித்து வெளியேறும். இதுதான் மாத விலக்கு உதிரம். (கருவாக்கம் நிகழ்ந்தால் எண்டோமெட்ரியம் கருவை வளர்க்கத் தொடங்கிவிடும்) மாதவிலக்கு உதிரம் 200-300 மி.லி. அளவில் 2-3 நாட்களாக வெளியேறிக் கொண்டிருக்கும்.
'மாதவிலக்கு காலத்தில் தம்பதிகள் உறவு வைத்துக்கொண்டால் ஜன்னி வந்துவிடும்' என்ற கருத்து தவறானது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது செக்ஸ் வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு கால வலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாம். (மாதவிலக்கு கால உறவால் கர்ப்பம் ஏற்படாது)
மாதவிலக்கு உதிரப்போக்கு அதிக நாட்கள் தொடர்வதும், ஒரே நாளில் வந்து நின்று விடுவதும் குறைபாடுதான். சிகிச்சை மூலம் அதற்கு உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும்.
கருப்பை வளரும் தன்மை கொண்ட திசு. உள்ளே தங்கும் கரு வளர வளர கருப்பையும் வளரும். இரண்டு, மூன்று குழந்தைகளை தாங்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. கரு, திசுவாகி- குழந்தையாக வளர்ந்த பின்பு கருப்பைக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அதனை சுருங்கவைத்து குழந்தையை வெளியே தள்ளுகின்றன. இதுவே பிரசவத்திற்கான தூண்டுதலாகும்.
கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
* எண்டோமெட்ரியம் பாதித்து கருப்பையில் காச நோய் தோன்றலாம்.
* தாய் வயிற்றுக்குள் இருக்கும்போதே பெண் சிசுவுக்கு கருப்பை உருவாகி விடும். முதலில் அது மாட்டுக்கொம்பு போல் இரண்டு டியூப் ஆக உருவாகி, வளர்ந்து இணையும். அதன் உள்ளே பள்ளமான பகுதியும் தோன்றும். ஒரு பக்கம் மட்டும் மாட்டுக்கொம்புபோல் வளர்ந்திருந்தாலோ, போதுமான வளர்ச்சியின்றி இருந்தாலோ, அளவில் சுருங்கி பிறவியிலேயே குறைபாட்டுடன் இருந்தாலோ அது பாதிப்பிற்குரிய அம்சமாகும். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்கு திருமணமாகி, குறைவற்ற முறையில் உடலுறவு நிகழ்ந்தாலும் தாய்மையடைய முடியாத சூழல் ஏற்படும்.
* கருப்பையின் வாய் எப்போதும் மூடியிருக்க வேண்டும். உயிரணு அதன் உள்ளே செல்லவும்- திரவம் வெளியே வரவும் மட்டும் வழியிருக்க வேண்டும். அதற்கு மாறாக கருப்பை வாய் திறந்திருந்தால் கரு உள்ளே தங்காமல், கலைந்து வெளியேறி விடும்.
* கருப்பையில் பைப்ராய்ட் போன்ற கட்டிகள் உருவானாலும் கருப்பை பாதிக்கப்பட்டு, தாய்மை தள்ளிப்போகும்.
* கருப்பை புற்றுநோய் தோன்றலாம்.
* கருப்பை வாயில் 'பாலிப்' எனப்படும் கட்டிகள் தோன்றலாம்.
பெண்களுக்கு தாய்மை தள்ளிப்போகும்போது கருப்பையில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான நவீன சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு: மாதவிலக்கு காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தி எந்த பொருளையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கும் நிலை இப்போதும் சில இடங்களில் இருக்கிறது. மனிதன் முதலில் காட்டுக்குள்தான் வாழ்ந்தான். அப்போது மனிதனைச் சுற்றி காட்டுமிருகங்கள் நிறைய இருந்தன. சிங்கம், புலி போன்றவைகள் மனிதனின் ரத்தவாடையை 2 கி.மீ. தூரத்தில் இருந்துகூட கண்டுபிடித்து, அங்கு மனிதன் இருப்பதை உணர்ந்து, தேடி வந்து தாக்கி விடும். அதனால் மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பான குகை மற்றும் உயரமான மரங்களில் வைத்தார்கள். இப்போது பாதுகாப்பான உலகில் பெண்கள் வாழ்வதால், மாதவிலக்கு காலத்தில் அவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
புற்று நோய் -
'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய் இது!
- ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு கண்டுகொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
புற்று நோய்க்கு என்ன காரணம்?
பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறிகள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகுறிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன.
அவை:
குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச்சிக்கல்.
எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகையிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்றவை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந்துதல், புகைப்பிடித்தல், வறுத்த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பிடும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற்றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று: குழந்தையில்லாமை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இருக்க தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இப்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.)
சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில்படுதல், சொரியாசிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.
(இந்தெந்த புற்றுநோய்க்கு இவைகள் காரணங்கள் என்று சொல்லப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல்லாத ஒருவருக்குகூட இந்த நோய் ஏற்படலாம். 'மது அருந்தமாட்டார். புகைப்பிடிக்கவும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்துவிட்டதே' என்று வருந்திப்பயனில்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.)
இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?
தடுக்க முயற்சிக்கலாம். மேற்கண்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருந்தால் முடிந்த அளவு தடுக்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பராக் பயன்படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர்த்திட முடியும்.
'ஹியூமன் பபிலோமாவைரஸ்' (Human Papilloma Virus - HPV) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படுகிறது. இவைகளை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நோய் தாக்கியிருப்பதை எத்தகைய சோதனை மூலம் கண்டறிய முடியும்?
முதலில் நாம் குறிப்பிட்டிருக்கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவைகளில் உங்களுக்கு எந்த மாதிரியான பரிசோதனை தேவை என்பதை டாக்டர் சொல்வார். அதைவைத்து நோயை கண்டறிவார். ஆனால் பயாப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடியும்.
சரி கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்திவிட முடியுமா?
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப்படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்டறிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குணப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் சில வகை புற்றுநோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. இதற்கு 'பெட்டன்சியலி க்யூரபுள் கேன்சர்' என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற்படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந்ததாகும்.
புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ்வளவு நல்லதில்லை என்பது சரியா?
காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நவீன ஆபரேஷன் முறைகளும்- கருவிகளும் வந்துகொண்டிருக்கின்றன. மருத்துவ நிபுணர்களும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்னால் புற்றுநோய்க்கு 'மேஜர்' ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது 'சிம்பிளான' ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன்களோடு ஒப்பிடும்போது புற்றுநோய்க்கான ஆபரேஷன் சற்று 'ரிஸ்க்'தான். இருந்தாலும் பயப்பட வேண்டியதில்லை.
புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் என்னென்ன?
மூன்றுவிதமான சிகிச்சைகள் கையாளப்படுகின்றன.
அவை:
1. அறுவைச்சிகிச்சை / சத்திர சிகிச்சை
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்)
3. கதிர்ப்பால் அகற்றல் / ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்)
பத்து சிறந்த உணவுகள்.
வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும், பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.
உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.
நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது.
இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.
சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....
* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.
* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.
* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.
* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும். சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.
* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள் எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.
* அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். அதைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.
* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும். அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும். வயிற்றிலுள்ள புண் குணமாகும்.
* குப்பைமேனிச் செடியின் வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
* பத்து கொன்றை மரப் பூக்களை 100 மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும். பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும். அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள் வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன குணமாகும்.
* சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா....
* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.
* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.
* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.
* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.
* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.
* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.
* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.
* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.
அறுகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண் ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.
தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
மருத்துவ குணங்கள்:
அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்கு அருகம்புல் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.
எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.
தொடரும்........