நீ...நான்...மழை...
நீ
நான்...
மழையாகிறோம்.
நனையும் காதலில்...
நீ மழைச் செடியாக
என் மேல் புன்னகைக்கிறது
உனது மழைப் பூ.
**************************************************
அந்தி முற்றத்தில்...
என் ஜன்னலோரமாய்
தயங்கித் தயங்கி சரிகிறது
நானும்...நீயும்...நனைந்த மழை.
கதவோரம் சரியும் உன் கண்களுக்கு...
வானவில்லாய் என்னைக் காட்டியபடி
தூரம் கடக்கிறது மழை.
*********************************************************
உனது ஞாபகங்களால்
என் தீராக் காதலாகிக் கொண்டிருக்கிறது
குழந்தைகளின் கப்பல் சுமக்கும் இந்த மழை.
நனைந்த சிறகுகளோடு ...
பறவையாய்த் திரிகிறேன்
எனக்கு மட்டுமான வான வீதியில்.
என் உலகம் சுருங்கிய வானத்தில்
மின்னலாய்க் கடக்கிறாய் நீ.
*****************************************************************
நேற்று பெய்த மழையில்...
அதன் சுவடுகளில்...
பூந்தொட்டியாய் என் பாதங்கள்.
நாளை ...எப்படியோ...
ஒரு கனவென முளைக்கும் செடியில்...
இலைகளாய் விரியும் உன் புன்னகையில்
வளரும் என் காதலும், நானும்.
**********************************************************************
மழையை நேசிக்காத காலங்கள்...
நிலம் வெறுக்கும் புயலாகிவிடுகிறது...
என்னிடம்.
அதீதமாய்த் திரியும் அதன் வழிகளில்...
உன் கண்ணீராய் வழிகிறது நமது மழை.
*********************************************************************
இன்று பெய்யும் மழை...
எனக்குள் நினைவுறுத்திச் செல்கிறது
ஒரு பழைய மழையை.
மௌனத்தாலான அதன் முதுகில்...
ஊர்ந்து திரிந்தது நினைவின் மேகங்கள்.
சீற்றமற்ற அதன் பாதையில்...
மிதக்கும் உன் கண்களில்...
நீளும் சரமாய் மலர்ந்து உதிர்கிறது...
என் மீதான உன் ப்ரியம்.
*********************************************************************
இன்று பெய்யும் மழையும்...
வெறும் மழையால் ஆனதில்லை.
கடைசியில் உதிரும்...
அதன் நீர்ச் சொட்டுக்களில்
மாலையாகிறது
நம் உதிராத ஞாபகங்கள்.
***********************************************************************