பெண் சிசு பாடையிலே.... ஓர் அவலம்
கட்டில் அடைந்து காதல் கொண்டு
தொட்டில் ஆட மலர்ந்தது செண்டு,
ஏட்டினில் படித்து வளர்வதற்குள்
காட்டினில் புதைக்கச் செய்தவன் யாரோ..
இச்சை இல்லை ஈனம் இல்லை
பச்சை மண்ணெனும் பிள்ளை தானே,
சர்ச்சைப் பாலுடன் முதல் எச்சிலை
மிச்சம் இல்லாமல் அச்சம் கொள்ளாமல்,
பச்சை மண் தனக்குப் பாலை வார்த்ததே..
நாட்டுக் கொலைகள் நாளொன்றும் நடக்க
நட்ட நடுஞ் சாமத்தில் நாடிகள் கிழிக்க,
பட்டினிச் சாவோ நாட்டின் குருதி போல் பாய
வீட்டின் இச்சாவோ வருடுகிறது ஈன நெஞ்சங்களை..
பெண்ணென்றால் பாவமோ பெற்றது அநியாயமோ
சின்னனென்ற சிறு வயதில் சிதைப்பதும் வீரமோ,
ஆணென்ற போதில் மட்டும் அரவணைப்பதேனோ
ஊனென்று உயிரென்று உருகிக் குழைவதும் ஏனோ..
கள்ளி விதை பாலில் பருக
அள்ளி இவள் உயிரும் கருக,
சொல்லித் தாலா சோகம் உருக
எள்ளும் கொள்ளும் இப்பொழுதே படைக்க நேருதே..
வீதிகள், நாதிகள், வாழும் ஜாதிகள்
நீதிகள் எதிர்ப்பில்லை நடந்திடும் சேதிகள்,
உரங்களாய் மாறும் பெண் சிசு உயிர்கள்
உறவுகளின் உக்கிரத்தாலே வடிந்திடும் உதிரங்கள்..
வஞ்சனை கொண்ட நெஞ்சங்கள்
நெஞ்சத்தினை பதைக்க,
நஞ்செனுஞ் சாற்றை நுகர வைத்து
பிஞ்சிவள் உயிரைச் சிதைப்பதும் ஏனோ..
சிசுவின் சிணுங்குரல் பதிலாய்
சிறந்தோங்கும் ஒப்பாரி என்ன,
சீரும் சிறப்பும் செய்யும் உனக்கு
சாறும் தந்து உயிர் பறிப்பதுமென்ன..
பகுத்தறிவை வகுத்துக் கூற
பட்டப் படிப்பேதும் தேவையில்லை,
பச்சிளம் உயிரை வதைப்பதனாலே
பாவங்கள் நிறைந்ததாய் உந்தன் வாழ் நாளே..