அசைக்க முடியாது...!!
என் வசம் நான் இல்லை புரியாதா !
என் சுகம் வேறு எதில் தெரியாதா !!
உன்னை விட்டு எங்கு செல்வது அறிவாயா?
என்னை விட்டு நீயும் சென்றிட விடுவேனா??
இதயத்தை தேடிய பிறகு
நானும் கண்டேன் உன்னடி அருகே !
இமைகளை மூடிய பிறகு
ஆறு முகமும் தெரிவது அழகே !!
அழகினை பாடிய நாவில்
ஊறும் சுவையை அறிவது பெரிதே !
அழகனை பாடும் யோகம்
நானும் அனுதினம் பெறுவது அரிதே !!
இமயமாய் மேவிய பக்தி
தேனாய் பொழியும் சிந்தை உருகி !
இணையிலா உனது சக்தி
பூவாய் மலரும் எங்கும் பெருகி !!
அருளினை தேடிய ஆன்மா
சேரும் கருணை வழங்கிய இடமே !
பொருளினை நாடிய ஆசை
ஓடும்- குகனை வணங்கிய கணமே !!
உடலினை தேடிய ஜீவன்
பாடும் மோட்சம் வேண்டும் என்றே !
உலகினை நாடிய பிறவி
முடிய- தருவாய் திருவடி நிழலே !!
தடையாய் ஏதும் இங்கே
வருமோ- தேடுதல் ஓயாத அலையே !
உன்னையே நாளும் பாடும்
எனது உள்ளம் அசையா மலையே !!
என் வசம் நான் இல்லை புரியாதா !
என் சுகம் வேறு எதில் தெரியாதா !!
உன்னை விட்டு எங்கு செல்வது அறிவாயா?
என்னை விட்டு நீயும் சென்றிட விடுவேனா??
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
