கஷ்ட்டங்கள் மறக்கவில்லை - சி. எம் .ஜேசு
கால் நடை பயணங்கள் - களை
எடுத்த கழனி மறக்கவில்லை
கேழ்வரகு ,கம்பு ,பருத்தி என்று
பிஞ்சு உண்டது மறக்கவில்லை
பசி மறைய கோதுமை
சோறுண்டது மறக்கவில்லை
திசை தெரிய பல இடங்கள்
சென்றதும் மறக்கவில்லை
ஆசையினால் நிலக்கடலை
பிஞ்சுண்டது மறக்கவில்லை
அல்லல் பட்டபோது உறவுகளின்
உதவிகள் மறக்கவில்லை
சொத்திலாமல் பத்திலாமல்
சுகம் கண்டது மறக்கவில்லை
விதைக்காக வேர்க்கடலை
உடைக்கும் போது - நண்ணிப்
பயிர் உண்டது மறக்கவில்லை
உலை வைக்க உரலிலே போட்டு
நெல் குத்தியது மறக்கவில்லை
கடையிலே பொருள் வாங்க
பண்டம் மாற்றியது மறக்கவில்லை
நுங்குண்டு பனைமரக் காய்களில் - செய்த
வண்டி மறக்கவில்லை - பெரிய
தும்பிப் பிடித்து நூல்தனில் கட்டிப்
பறக்கவிட்டது மறக்கவில்லை - ஆழக்
கிணற்றிலே குதித்து அலைகளை அடித்து
நீச்சல் கற்றது மறக்கவில்லை - மரக்
குச்சி உடைத்து பற்களை தேய்த்து
கம்மங் கூழ் உண்டது மறக்கவில்லை