பாறையின் மனம்

தெருவோடு போன யாரோ சிலர்
எருமைச்சாணத்தை வாரி
எரிந்துவிட்டுப் போனார்கள்.

அடுத்துவந்த ஒருவன்
ஆத்திரத்தோடு
காலில் கிடந்த செருப்பை
கலட்டி வீசி காரி உமிழ்ந்து போனான்.

அவ்வழியே சென்ற
நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்
நீ கெட்ட கேட்டுக்கு
உனக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்
என்று தங்களின் விளக்குமாற்றால்
நாலு சாத்து சாத்திவிட்டுப்
போனார்கள்.

போதையில் போன
நமது குடிமகன்கள் எல்லாம்
தங்களின் தேசிய மொழியான
கெட்ட வார்த்தையில்
அபிஷேகித்துப் போனார்கள்.

நாசமாய் போனவனே..
ஊரை கொள்ளை அடித்து
உலையில் போட்ட துரோகியே..
கேடு கெட்டவனே ..
ஏழை பெண்களின் மானத்தை கெடுத்தவனே..
எத்தனை பேரோட பூவையும் பொட்டையும்
பறிச்சவனே..நீ நரகத்துக்குத்தாண்டா
போயிருப்பே ..

உன்னுடைய பேர் கூட
ஞாபகத்துக்கு வரக்கூடாதுன்னு நினைச்சா
உன்னுடைய உருவச்சிலையை
வைச்சுருக்கானுன்களே..
முதலில் அவனுங்களை அடிக்கணும்
என்று மனிதர்கள் திட்டியது போதாதென்று
ஒரு தெரு நாயும்
காலடியில் வந்து சிறுநீர் கழிக்க,
உடலெங்கும் பறவைகள் கூட
எச்சங்கள் பீய்ச்சி ஆத்திரம் தணித்தன.

இப்படி இன்னும்
அவ்வழியே சென்றவர்களில்
தொண்ணூற்றி ஒன்பது வீதமானோர்கள் ஏதாவது சொல்லி திட்டி
போனபோது
தன்னை ஒரு சிலையாக்கி
அழகு பார்த்து ஊர் ரசிக்க விட்ட
சிற்பியை மெச்சியதெல்லாம்
எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று சிலையான நின்ற பாறை
அழுதே விட்டது.

கலைக்கென்று உளி அடி
வாங்கியபோது தாங்கிய வலியை
ஒரு அரசியல்வாதியின்
சிலைக்காக சொல்லடி வாங்கியதில்
தாங்காத பாறை எண்ணிக்கொண்டது

மனங்களே
பாறையாய் கொண்ட இந்த
மனிதர்களின் சிலையாகி
கேவலபாடுவதிலும் பார்க்க
யாருக்கும் உபயோகம் இல்லாமல்
இருப்பது எவ்வளவோ மேல்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் இலங்கை (14-Jun-13, 3:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 74

மேலே