உள்ளம் என்பதென்ன?
பாடுகிறேன் பாடுகிறேன்
பாட்டு ஒன்னு பாடுகிறேன்.
தேடுகிறேன் தேடுகிறேன்
தெய்வத்தையே தேடுகிறேன்.
இருக்கிறானோ இல்லையோ
இருந்தால் அவன் நல்லதே!
காட்டு எனக் கேட்கிறானே
காற்றைக் காணக் கூடுமோ!
கண்ணாடி இல்லா அக்
காலமதில் மனிதனோ
தண்ணீரில் தன்னையே
தானுங் கண்டறிந்தானே!
உன்னை நீ அறிவதற்கோ
ஒன்றுனக்குத் தேவையெனில்!
இறைவனை உணர்வதற்கு
என்ன அது தேடினோமோ!
இதயம் என்றால் என்னவோ
இரத்தம் செய்யும் கருவிதானே!
உள்ளம் அது எங்கேயோ!
உணர்ந்தோமோ !தெளிந்தோமோ!
எங்கெங்கோ தேடுகிறோம்!
இருக்குமிடம் மறந்துவிட்டோம்!
உள்ளத்தில் இருப்பவனை
உணரும் வழி தவறிவிட்டோம் !
உணர்ந்திடும் உபாயமோ
உள்நினைந்து தேடுவதே!
உள்ள உள்ள உள் வருவான்..
உள்ளமே அவன் வாசம்!!
உயிரென்றால் என்னவென்றும்
உள்ள இடம் எதுவென்றும்
இதுவரையும் புரியாமலே
இறைவனை நாம் தேடுகிறோம் ..
காணக்கிடையா மாயனவன்!
காணா நிறைத் தூயனவன்!
கண்டுவிட்டால் பக்தியில்லை!
அண்டிவிட்டால் பயமுமில்லை!
சுத்த சன் மார்க்கமதை
நித்தியம் பழகிடவே!
சுத்தமாகும் சித்தமே!
சத்தமின்றி உள் அமர்வான்!.
உள்ளிருக்கும் கோவிலது
உள்ளமே என உணர்க!
நள்ளிருக்கும் நாசங்களை
வெல்ல ஆகும் அவன் வரவு.!
ஜோதியாய் நிறைந்திடுவான்!
நீதியாய் உறைந்திடுவான்!
ஆதியாய் மலர்ந்திடுவான்!
நாதியாய் கலந்திடுவான்!
இயங்குவது உண்மையானால்
இயக்கும் விசை ஆய்ந்தோமோ!
அறிவியல்தான் அதுவென்றால்
அது அவனே இறையென்போம்!
கொ.பெ.பி.அய்யா.