" சிறந்த கவிதைகள் " நாள்- 15/06/2013 ***ஆவாரம் பூ***
இத்தள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்...
15/06/2013 அன்று வெளியான சிறந்த படைப்புகள் நடுவரால் தொகுத்து அளிக்கப்பட்டு உள்ளது..
1.வீண் பிடிவாதம் - ஓட்டேரி செல்வகுமார்
2.சிசு உதை : மெய்யன் நடராஜ் இலங்கை
3.பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
4.தமிழுக்கு வணக்கம் : ச. சங்கு சுப்ரமணியன்
5.சில நாடகங்கள்..... கவிஜி
=============================================
இக்கவிதைகளின் தொகுப்பு...
1.வீண் பிடிவாதம்
*******************
எனக்கு பிடிச்ச
கலர் உனக்கு பிடிக்காது
உனக்கு பிடித்த
சாப்பாடு எனக்கு பிடிக்காது ...
நான் நம்புவதை
நீ நம்ப மாட்டாய் ...
நீ நம்புவதை
நான் நம்பமாட்டேன்
நான் ஒன்று சொன்னால்
நீ ஒன்று சொல்லுவாய்
நீ ஒன்று சொன்னால்
நான் ஒன்று சொல்லுவென்...
இப்படி கழியும்
நம் வாழ்வின் நாட்களில்
உனக்கும் எனக்கும்
பிடித்தது
நம் குழந்தை என்கிற போது
உனக்கும்
எனக்கும்
பிடிக்காதது எல்லாம்
வீண் பிடிவதமாகி
சிரித்து தொலைகிறது
அணு தினமும்
ஏன் எனில்...
நம் குழந்தை
உன்னில் பாதி
என்னில் மீதி
அல்லவா என்
அறுபது கிலோ
அல்வாவே ?
என்ன அல்வா
என்றதும் ஏன் முறைகிறாய்
என்னை ரசகுல்லா என்று
சொல்லிவிட்டு போ ...
போய் இன்னும் என்னை
முறைக்க தொலைகாட்சி தொடர்கள்
பார்த்து தொலை...
மிச்சத்தை நாளை பாத்துக்கலாம் ....
எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார்
நாள் : 15-Jun-13, 12:11 am
சேர்த்தது : otteri selvakumar
===================================
********************************************************
2.சிசு உதை
*********************
சதுமுகன் செதுக்கிய சலவைக் கல்லவள்
..சரிவதும் அன்ன நடை
மதுரச மாதுள மார்புகள் கொண்டவள்
..மலர்விழி விரித்திடும் கடை.
புதுவகை வாழையின் புகழ்மிகு மடல்களால்
..புனைந்தது போளிலந் தொடை.
முதுமையை அடைந்தவர் மனதையும் உடைத்திடும்
..முக்கனிச் சாறவள் முடை.
அழகினைத் தடுப்பதில் அடைப்பக மதிலென
..அவளுடல் மூடிய உடை .
பழகிய விழிகளால் பார்த்திட முனைந்திடும்
..பருவமோ சமரிடும் படை.
நிழலென தொடர்ந்திடும் நினைவிலும் கனவிலும்
..நிலவெனும் கொடியவள் இடை
புழங்கிடத் தவமது புரிந்திடும் புழுவதன்
..புகலிடம் தேன்அதன் அடை.
காமனின் தேன்மழைக் காதலால் நனைகையில்
..காரிகை யாலெழிற்ற் குடை.
வாமமும் வழிந்திடும் வனிதையின் மேனியோ
..வசந்தம் வழங்கிய கொடை.
சாமமும் நாணிட சரசமும் நிகழ்ந்திட
..சங்கமம் ஆவதில் தடை
தாமதம் வருவதை தவிர்த்திடும் அவளிடை
..தன்னிலே உடையுமோர் மடை,
மடையது உடைகையில் மலரவள் இதழ்வழி
..மதுரமாய் வெளிவரும் குரல்
தடைதனை அகற்றிய தலைவனைத் தழுவிட
..தவிப்பதி லிலெழுங்கு முரல்
இடைவெளி குறைத்திரு இளநீர் பருகிட
..இதழுடன் ஊர்ந்திடும் விரல்
படைதனை ரசித்திடும் பதுமையின் புதுமையில்
..பவ்யமா யிடிபடும் உரல்.
இடிபடும் உரலதில் இளமையின் அனுபவம்
..இரகசிய பொடிதரும் வதை
கடிபடும் நாயென கதறிடும் கவிதையின்
..கலையகம் நவரசக் கதை
படித்திடும் பரவச பாடமும் முடிவினில்
..பக்குவ மாயொரு விதை
துடிப்புடன் முளைவிட துகிரவள் மடிதனில்
..துலங்கிடும் சிசுவதன் உதை!
எழுதியவர் : மெய்யன் நடராஜ் இலங்கை.
நாள் : 15-Jun-13, 2:30 am
சேர்த்தது : athinada
=================================
*****************************************************
3.பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
பெண் பிறந்தால்
பேதலிக்கும் மனிதர்களே!
ம்ருமகள் கிடைக்காமல்
மண்டியிடும் நாள் வரும் !
ஆட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
மாட்டிற்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
கோழிக்குப் பெண்பிறந்தால் மகிழ்ச்சி !
பெண்ணிற்குப் பெண் பிறந்தால் ஏன் இகழ்ச்சி ?
பெண்ணிற்கு முன்னுரிமை
பேருந்தில் தந்தோம் !
திரையரங்கில் தந்தோம் !
இல்லத்தில் தந்தோமா ?
இதயத்தில் தந்தோமா ?
இல்லதரசிக்குத் தந்தோமா ?
உணவு உண்பது உடை உடுப்பது
உறக்கம் கொள்வது
இருபாலருக்கும் பொது !
ஒழுக்கம் மட்டும் பெண்ணிற்கு மட்டும்தானா ?
ஆணிற்கு வேண்டாமா ?
பெண்ணுரிமை பற்றிப்
பேசிவிட்டு வந்து
எதிர்த்துப் பேசிய
இல்லதரசியை எட்டி உதைக்கும் அவலம் .!
பெண்ணுரிமை ஏட்டில் எழுத்தில்
தந்தால் போதாது !
பெண்ணுரிமை நாட்டில் நடைமுறையில்
வீட்டில் தர வேண்டும் !
எழுதியவர் : கவிஞர் இரா .இரவி
நாள் : 15-Jun-13, 8:22 am
சேர்த்தது : eraeravi
==========================================
4.தமிழுக்கு வணக்கம்
********************************
"அ" - கரத்தில் தொடங்கி
"ன" - கரத்தில் நீள்பவளே - எங்களின்
சிந்தனை சிகரத்தில் சொல்லாய்
சீர்பெற்று சிறப்பவளே
இயலிசை மூன்றிலும்
குயிலிசைத் தருபவளே
சொல்லழகு விளக்கில்
சுடராய் ஒளிர்பவளே
அறுசுவை நாவறியும் - நீ நல்கும்
பொருள்சுவை உணர்வறியும்
உணர்வரிந்துக் கவிதையாய்
உரு பெறுபவளே
உன்னதத் தமிழே - அமுதே
தமிழமுதே - தலையாய வணக்கங்கள்
எங்கள் பிறவிக் கோயிலில்
கர்ப்பக் கிரக தெய்வமாய்
குடிக் கொண்டிருப்பவளே
குலமகளே - குணமகளே
கும்பிட்டு வணங்கினோம் உன்னை
குரலசைத்து பூஜிக்கின்றோம் உன்னை
குணவதியே - என்றுமே எங்களுக்கு
கூடவே இருப்பாய் - தொட்டால்
மெல்லின மொழியாய் சிறப்பாய்
மெய்யும்,உயிரும்,உயிர்மெய்யும்,
பெய்யும் வான்மழையாய் - எங்களின்
கற்பனையில் அடர்ந்து வழிபவளே
கனியையும் மிஞ்சி சுவை தருபவளே
சுவைத்துக் கொண்டே இருப்போம்
சுகத்தையும் உன்னால் வாங்கிக் கொண்டே இருப்போம் - இடைவேளை - என்றுமே
இருக்கக்கூடாது - இரவும் பகலும்
மாறியே வந்தாலும் - என்றுமே
மாறாதவள் எங்களுக்கு நீதானே
வீணையை விரலசைத்தால் நாதம் - கற்பனையை
வளரவிட்டால் உந்தன் வேதம்
வேதமும் நாதமுமாய்
விளங்குபவளே - இருளகற்றி ஒளிதரும்
விளக்காய் துலங்குபவளே - எத்தனையோ
ஆயிரம் அகல் விளக்குகள் உன்னால்
ஒளிவீச வழிதேடுகிறது - "ஓம்காரம்" ஆனவளே
நீயே எங்களுக்கு பிரணவமே - எங்களை
ஒளிவீச வை - அவ்வொளில் - உன்பெருமையை
பேச வை.
எழுதியவர் : ச. சங்கு சுப்ரமணியன்
நாள் : 15-Jun-13, 5:06 pm
சேர்த்தது : s.sankusubramanian
=========================
******************************************
5.சில நாடகங்கள்.....
*************************
விரட்டலும் விடுவதும்
எந்த நிலை...
ரயிலுக்கும், ரயில் பாதைக்கும்....
பதின் பருவத்து
பிள்ளைகள்
தலை குனிந்து
நடப்பது
வேதியியல் மாற்றத்தின்
முதல் நிலை....
ஒற்றை கொக்கும்
ஒற்றை பனையும்
சொல்லும் கதை
காதலிக்கா..... காதலனுக்கா....
காசு கொடுத்து
விற்கப்பட்டவள்
மானம் காத்தாள்...
காசு வாங்கி விற்கப்பட்டவள்
மௌனம் காத்தாள்...
அருவி, ஏறி, கடல்
வறட்சி, வெயில் சூடு,
மாற்றிக் கொள்ளும் ...
மூளையின் மடிப்பில்
கணினி சாகட்டும்....
இணையாத புள்ளிகளிலும்
கோலம் போடும் விரல்கள்
அவளுக்கானது......
அவிழ்ந்த ஆடை
அவிழ்க்கப்பட்ட நொடி
வெட்கம்
தேங்கி போனது...
இடைப்பட்டதொரு
கால நிர்வாணத்தில்.....
திறந்த ஜன்னல்
ஒட்டுப் போட்ட பின்
இரு வண்ணத்தில்
ஒரு கச்சை....
அழிக்க முடியாத
நினைவுகளில்
நக்கி கொடுக்கும்
நாயின் நாக்கில்
ஒழுகுகிறது
மரணத்திற்கான விளக்கம்....
குழந்தைகள்
செய்து காட்டும்
பெரியவர்கள்
குழந்தைகளாகவே
இருக்கிறார்கள்....
யாருமில்லாத
மேடை நாடகத்தில்....
எழுதியவர் : கவிஜி
நாள் : 15-Jun-13, 10:31 pm
சேர்த்தது : கவிஜி
===========================================
நன்றி
நடுவர் குழு.