டீக்கடை - பேங்குக செய்யிர அட்டகாசங்க – கிரெடிட் கார்டு 1

பைக்கு ஓட்டிக்கிட்டு இருக்கும்போதே திடீர்னு மொபைல் பெல் அடிக்கும். அவசரமா எடுத்து காதுல வெச்சி ஹலோன்னு சொன்னா “கிரெடிட் கார்டு வாங்கிக்குங்க” அப்படீன்னு ஒரு குரலு…. வண்டிய நிறுத்தாமலேயே அவுகள நாலு திட்டு திட்டிப்புட்டு நம்ம வேலய பாக்க போயிப்புட்ரோம்….

வேணா வேணாமின்னு சொன்னாலும் கேக்காம நம்ம கையில இந்த கிரெடிட் கார்டை திணிக்கிற பேங்குகளையும், அவுக ;லோன் குடுக்குற லட்சணத்தையும் நினைச்சாலே ஒரே கடுப்பா வரும்.

இன்டெர்னெட்டில எங்கியாச்சும் நம்ம டீடெயில போட்டிருப்போம். அதுல இருந்து எடுப்பாக நம்மள பத்தின எல்லா விஷயங்களையும். போன்ல அப்படியே ஒப்பிப்பாக. நமக்கு ஆச்சரியமா இருக்கும். நம்மள பத்தி இவ்ளொவ் தெரிஞ்சு வெச்சிருக்காகளே…. அப்ப நமக்கு வேண்டப்பட்டவுகளாத்தா இருக்குமின்னு பேச்சுக் குடுப்போம். அதுல இருந்து சில தகவல வாங்கிக்கிட்டு அடுத்த கால் போட்டு, ஒங்க அட்ரசு இதுதானே அப்படீன்னு கரெக்டா நம்ம அட்ரசை சொல்லுவாக. நாம ஆமான்னு ஆச்சரியமா சொன்னதை குறிச்சி வெச்சிக்கிட்டு, அடுத்த வார்த்தையா, ஒங்க பேருக்கு கிரெடிட் கார்டு அப்ரூவ் ஆயிருச்சு. நீங்க வாங்கிக்ரீகளா இல்லியான்னு நேரடியாவே கேப்பாக… நமக்கு தலைகால் ஒன்னுமே புரியாது….. நாந்தா அப்ளையே பண்ணலியே அப்படீன்னு கேட்டா, இது ஒரு சில ஸ்பெஷல் ஆளுகளுக்கு மட்டும் ஸ்கீம் எடுத்து அதுல ஒங்களுக்கு மட்டும் அப்ரூவ் ஆகியிருக்கு அப்படீன்னு கரடி விடுவாக.

நாம நம்பாம அதெல்லா ஒன்னும் வேணாமின்னு சொல்லி போனை கட் செஞ்சாலுமே ரெண்டு நாள்ல நம்ம வீட்டுக்கு ஒரு கூரியர் வரும். அதுல கிரெடிட் கார்டு அப்படீன்னு சொல்லிக்கிட்டு வந்த பையன் (கூரியர்கள்ல பயல்க தானே வேலை செய்யிராய்ங்க… பொண்ணுக எங்க ஃபீல்டுல போரது) நாம இல்லாத நேரமா பாத்து, வீட்டுல இருக்குறவுக கிட்ட டெலிவரி செய்வான். நம்ம வீட்ல இருக்குரவுக யாராச்சும், நாம வீட்ல இல்லைன்னு சொன்னா, திரும்பி போக மாட்டான். யார் வேணுமின்னாலும் வாங்கிக்குங்க. நீங்க அவருக்கு உறவுதானே அப்படீம்பான்.

சரிப்பா குடுப்பா, நானே வாங்கிக்குறேன்னு கைய நீட்டினா, அத பாருங்க இது கிரெடிட் கார்டு விஷயம். அதுனால, வாங்கிக்குரவுகளோட அடையாள அட்டை வேணும் அப்படீம்பான். வீட்ல இருக்குறவுகளும் வோட்டர் கார்டோ, பான் கார்டோ கொண்டு வந்து காட்டினா அதோட ஜெராக்ஸ் காப்பி வேணும்பான். உடனே வீட்ல இருக்குறவுகளும் அவசரமா போயி ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டு வந்து குடுத்தா, அதுல கையெழுத்தும் வேணும் அப்படீம்பான். அதுக்கு காரணம் வேற சொல்லுவான். இப்ப எல்லாம் நிறைய பேரு இப்பிடி அவுக சம்மதம் இல்லாமலேயே ஜெராக்ஸ் காபி எடுத்து என்னமோ எல்லாமோ செய்ராக அதுனாலதான் இப்பிடி ஒரு நடைமுறை அப்படீன்னு விளக்கவுரை குடுத்து, கையெழுத்து போட்ட ஜெராக்ஸ் காபி அடையாள அட்டைய வாங்கிக்கிட்டு, கிரெடிட் கார்டை அவுக கையில குடுத்துப்புட்டு தாங்கிட்ட இருக்குற ஒரு நீள பேப்பர்லயும் கையெழுத்து வாங்கிக்கிட்டு போன் நம்பரும் கேட்டு வாங்கி எழுதிக்குவான்.

அந்த ஜெராக்ஸ் காப்பிய வெச்சு இன்னும் என்னவெல்லாம் ஃப்ராடு செய்யிராய்ங்கங்க்ரது எல்லாம் ரொம்ப லேட்டாத்தா நமக்கு தெரியவரும். இந்த விஷயங்களை கொஞ்சங்கொஞ்சொ தெரிஞ்சு வெச்சிக்கிட்டு இருக்குறவுக, கூரியர் பையன் கையெழுத்தில்லாம ஜெராக்ஸ் காபி வாங்கிக்கிட்டு போயிட்டான்னா அதப் பத்தி பேசியே சந்தோஷப்பட்டுவாக. இன்னும் சிலரு எந்த ஜெராக்ஸ் காபியும் கேக்காமலேயே குடுத்துப்புட்டு போயிட்டான்னா அத விட ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டு பேங்க் செய்யிற அட்டூழியத்தை மறந்தே போயிருவாக

நாம வந்து வீட்டுக்காரவுக கிட்ட காச் மூச்னு கத்திக்கிட்டு இருப்போம். அவுக யோசனை சொல்லுவாக. சரி வேண்டாமின்னா விடு. எங்கியாச்சும் பத்திரமா வெய்யி. யூஸ் பண்ணினாத்தானே விவகாரம். புதுசா அப்படியே பத்திரமா வெச்சிருந்துப்புட்டு காலாவதியானப்புரம் தூக்கி எறிஞ்சிர வேண்டியதுதானே அப்படீம்பாக. அந்த நேரம் சமாதானம் ஆகிபோவோம்.

ஒரு நாள் திடீர்னு ஒரு பில்லு வரும். அதுல, நீங்க பேங்குக்கு ஆயிரம் ரூபாய் சர்வீஸ் சார்ஜும் அதுக்கு லேட் ஃபீசா ஒரு முன்னூரு ரூபாயும் கட்டணும். அத இந்த தேதிக்குள்ள கட்டலைன்னா அதுக்கு பெனால்டி போடுவோமின்னு அதுலயே எழுதியிருக்கும். அதுல எதுனாச்சும் பிரச்சினைன்னா இந்த போன் நம்பர்ல கஸ்டமர் கேருக்கு பேசுங்கன்னு எழுதியிருக்கும்

நாம உடனே கஸ்டம் கேருக்கு ரொம்ப சின்சியரா போன் பண்ணுவோம். ஒரு மணிநேரமா வாய்ஸ் ரெகார்டு சர்வீஸ்ல போட்டு, அங்க இங்க சுத்தவிட்டுட்டு கடைசீல ஒருத்தரு லைன்ல வந்து “சாரி சார் இது இந்த டிபார்ட்மென்ட்ல வராது, அதுக்கு நீங்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்கன்னு ஒரு நம்பரை சொல்லிப்புட்டு போனை கட் பண்ணிப்புடுவாரு. இதுக்கு போன் பில்லு எப்பிடியும் ஒரு 25 ரூபாய் ஆயிருக்கும்

அடுத்தடுத்து இதேபோல கிடைக்கிற நம்பர்களுக்கு போன் செஞ்சி நாம செலவழிக்கிற ரூபாய் எப்படியும் 100 ஐ தாண்டிரும். இருந்தாலும் நாம விடாம சின்சியரா தொடர்ந்து முயற்சி செஞ்சிக்கிட்டே இருந்து கடைசியா ஒரு நம்பர்ல சரியான ஆளுகிட்ட பேசினதா திருப்தி அடைவோம். அவுக சொல்லுவாக, "சாரி சார். ஒங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு. ஒங்க இந்த புகாரை இதுக்குண்டான டிபார்ட்மென்டுக்கு ஃபார்வேடு செய்யுரோம். கம்ப்ளைன்ட் நம்பர் நோட் பண்ணிக்குங்க" ன்னு சொல்லி ஒரு வாழ்த்தோட லைன கட் செய்வாரு. நாமும் எதயோ சாதிச்சுட்டதா நெனைச்சு அப்பாடான்னு வீட்டுக்கு வந்து மத்த வேலய பாப்போம். இத மறந்தே போயிருவோம்.

அடுத்து என்ன நடக்குதுன்னு அடுத்த தொடர்ல பாப்போமா…..?

உங்க பாமரன்.

எழுதியவர் : மங்காத்தா (23-Jun-13, 10:47 pm)
சேர்த்தது : மங்காத்தா
பார்வை : 74

மேலே