நிதர்சனம்

குளிர் அருவி நீரோடையில்
குளிக்கப் போனேன்
மலையரசி பாட்டில்
மயங்கி குளிக்காமல்
திரும்பி வந்தேன்

வெண் நிலவை பிடிக்க
வானம் போனேன்
தாயின் இடுப்பில்
இருந்த குழந்தை
அழுதது என்று
திரும்பி வந்தேன்

நீல வண்ணத்தை பிரிக்க
கடலுக்கு போனேன்
அவள் நிர்வாணத்தை
மறைக்க நிலவை
அழைத்தால்
திரும்பி வந்தேன்

இருட்டை பிடிக்க
பகலில் போனேன்
இருப்பிடம் தெரியாததால்
திரும்பி வந்தேன்

கடவுளை பார்க்க
காடு மலை ஏறினேன்
மழலையின் சிரிப்பில்
இருப்பதாய் சொன்னதால்
திரும்பி வந்தேன்

நெல் அறுக்க
கழனிக்கு போனேன்
மழை இல்லாமல்
நிலம் அழுததால்
திரும்பி வந்தேன்

மனித நேயம் தேடி
மனிதரிடம் போனேன்
மனிதரில் சுயநலம்
இருந்ததால்
திரும்பி வந்தேன்

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (25-Jun-13, 7:28 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
Tanglish : nidarsanam
பார்வை : 61

மேலே