நாங்களும் மனுசங்க தான்

----- நாங்களும் மனுசங்க தான் -------

புலிகள் கூட்டம்
குறையுதாமே
கணக்கெடுக்க சொல்லுது
கவுர்மெண்டு...

நாங்க மனித கூட்டமுங்க
மதிக்காம போறீகளே....?

அடிமட்ட தொண்டேன்
அரசியல் பண்ண
பல பொண்ணுகள கூட்டி கொடுத்து
பதவிக்கு வரலாம்.....

ஒத்த வேள சோத்துக்கு
ரத்தம் கசிய
நான் செஞ்சா அது
பாலியல் தொழில்.......?


வீட்ட விட்டும் தொரத்தியாச்சு
பள்ளிக்கூடம் நிறுத்தியாச்சு
வேல கேட்டு வந்தவள வெரட்டியாச்சு
கடைசில
இவ மனுஷியே இல்லைன்னு ஒதுக்கியாச்சு

வாழுறதுக்கு இப்ப
ரெண்டு வழி...

பிரச்சாரம் பண்ணி பிச்சை எடுக்கணும்
இல்ல
விபாச்சாரம் பண்ணி வயித்த கழுவனும்

கையேந்தி நான் நிக்கையில
அருவருப்பா பாக்குற
தர்ம பிரபுவே!
சொல்லுங்க
நான் என்ன செய்ய ?

ஒழச்சு களச்சு
ஒன்னு ரெண்டு பேரு
எங்க இனத்துல
வைராக்கியமா வாழுறாக...

என்ன புண்ணியம் ?

போலியா ஒருத்தர்
பொம்பள வேஷம் போட்டா
ஒலக நாயகன் பட்டம் கொடுத்து
ஒசத்துரீக....

உடலுக்குள்ள வேராடி
உள்ளுக்குள்ள போராடி
உசுர கீறி
சேல கட்டுறேன் சாமி...
தெரு நாயாட்டம்
நடத்துரீக.....

மருவாதைய பேசுனவுக
எங்கள
கண்ணியம பாத்தவுக
எல்லாத்தையும்
கையெடுத்து கும்பிடுறோம்.

மார்ப கசக்க வந்தவுக
இருட்டுக்குள் இழுத்தவுக
ஐயா
எங்கள விட்டுடுங்க
கால தொட்டு கும்பிடுறோம்...

பெத்தவளே அடிச்சென்ன
பத்திவிட்ட பொறவு
மதத்தவர குத்தோம் சொல்லி
என்ன பண்ண?

குறியறுத்து
குமரியானாலும்
மரணம் வரை நாங்க
மலடிதாங்க.

வடக்கு பக்கம்
எங்கள
தெய்வ பெறவியா பாக்குறாக....

அதெல்லாம் ஒன்னும் வேணாம் சாமி
எங்கள
மனுச ஜென்மமா பாருங்க போதும்..---- தமிழ்தாசன் -----

எழுதியவர் : தமிழ்தாசன் (25-Jun-13, 12:52 pm)
பார்வை : 225

மேலே