வாழ்க்கைத் தெளிவு
நாளைய பயங்கள்
நம்மனதில் இருக்குமட்டும்
இப்பொழுதுக்கு
இனிமை கூட்ட
எப்பொழுதும் முடியாது.
நாளைய பயங்கள்
நாயாகத் துரத்துகையில்
உயிர்புரியும் பொழுதுவரை
ஓட்டம் நிற்காது.
நாளை வரட்டும்
பார்க்கலாமென்று
இன்றைக் கடமைகளை
இனிமையுடன் மேற்கொள்வோம்.
நாளை வருமாயின்
நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.
எந்த நொடியிலும்
நம் வாழ்வு முடியும்.
இதையணர்ந்தால்,
இருக்குங் காலத்தில்
கருத்துடன் கடமை செய்து
நிறைவான மனதுடன்
நிம்மதியாய்ப் போகலாமே!
எது குறித்தும் ஏக்கமின்றி
எவ்வெதிர்பார்ப்புமின்றி
வாழப்பழகினால்
வாழ்க்கை வசப்படும்.
எவரைத் தள்ளியும்
முன்னேற வேண்டாம்.
எவர் பொருளும் களவிட்டு
நம் கைசேர்க்கவேண்டாம்.
மற்றவர் மனம்நோக
மகிழ்வில்லை நமக்கு.
வாழுங்காலத்தில் மற்றோர்
மதிக்கும்படி வாழ்வோம்.
போகுங்காலத்தில் நால்வர்
துணையோடு போவோம்.