புறநானூறு பாடல் 24 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
இப்பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் ஆகும். இவன் சிறுவதிலேயே பாண்டிய நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டப்பட்டான். இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் முடிவேந்தர்கள் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மற்றும் வேளிர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரை தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று இவன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப் பட்டான்.
இப்பாட்டைப் பாடிய சான்றோர் பத்துப்பாட்டிற் காணப்படும் மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி மருதனார் ஆவார். இப்பாட்டிலும் அக்காஞ்சியே பொருளாகப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகின்றார். இதில் ‘நல்ல ஊர்களை உடைய சிறந்த எவ்வி என்பவனுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்க்குரிய முத்தூறுக் கூற்றத்தையும் வெற்றி கொண்ட நெடுஞ்செழிய!
நின் நாண்மீன் நிலைபெறுக; நின் பகைவர் நாண்மீன் பட்டொழிக; வாள் வீரர் வாழ்த்த, பரிசிலர் புகழ் பாட, மகளிரொடு மகிழ்ந்து இனிது வாழ்வாயாக; அவ்வாறு வாழ வல்லோரையே வாழ்ந்தோர் என்பர்; இவ்வுலகில் பிறந்து புகழ்பட வாழாதோர் வாழ்ந்தோர் எனக் கருதப்படார்’ என்று நாளும் போரையே எண்ணி உழலும் அவன் நெஞ்சினைத் தேற்றி இன்ப வாழ்வில் ஈடுபடச் செய்கிறார். அருளும் பொறையும் நிறைந்த உள்ளம் உடையவனாக வேண்டும் என்று விரும்புகிறார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
நெல்லரியு மிருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயின்முனையிற்
றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து
திண்டிமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு 5
தண்குரவைச் சீர்தூங்குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் 10
முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்
இரும்பனையின் குரும்பைநீரும்
பூங்கரும்பின் றீஞ்சாறும்
ஓங்குமணற் குவவுத்தாழைத்
தீநீரோ டுடன்விராஅய் 15
முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயுந்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
ஓம்பா வீகை மாவே ளெவ்வி
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
கயலார் நாரை போர்விற் சேக்கும் 20
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தாறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலைஇயர்நின் னாண்மீ னில்லாது
படாஅச் செலீயர்நின் பகைவர் மீனே 25
நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்னநின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவன் மாக்க ளீகை நுவல 30
ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது
வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப தொல்லிசை
மலர்தலை யுலகத்துத் தோன்றிப் 35
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.
பதவுரை:
நெல் அரியும் இருந்தொழுவர் – நெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர்
செஞ்ஞாயிற்று வெயின் முனையின் – சிவந்த கதிரவனது வெயிலின் வெப்பத்தைப் பொருட் படுத்தாது
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து – தெளிந்த கடல் அலைகளின் மேல் பாயும்
திண் திமில் வன் பரதவர் – வலிமை பொருந்திய மீன்பிடிக்கும் படகுகளையுடைய வலிய மீனவர்கள்
வெப்புடைய மட்டுண்டு – வெம்மையுடைய மதுவை உண்டு
தண் குரவைச் சீர்தூங்குந்து – மென்மையான குரவைக் கூத்துக்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடும்
தூவற் கலித்த தேம்பாய் புன்னை – கடற் துவலை யாலே தழைத்த தேன் பாயும் புன்னையின்
மெல்லிணர் கண்ணி மிலைந்த மைந்தர் – மெல்லிய பூங்கொத்தால் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர்
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – அழகிய வளையல்கள் அணிந்த மகளிரை முன்னிலைப் படுத்தி கையால் தழுவி ஆடுவர்
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் – வண்டுகள் மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறுமணம் கமழும் கடற்கரைச் சோலையில்
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் – கடல் முள்ளி மலர்களால் புனையப்பட்ட மாலையை அணிந்தும், கைகளில் அழகிய வளையல்களணிந்த இளம்பெண்கள்
இரும் பனையின் குரும்பை நீரும் – பெரிய பனையினது நுங்கின் நீரும்
பூங் கரும்பின் தீஞ்சாறும் – பொலிவுடைய கரும்பின் இனிய சாறும்
ஓங்கு மணல் குவவுத் தாழை தீ நீரோடு உடன் விராஅய் – உயர்ந்த மணற்பாங்கான இடத்தில் விளைந்த திரண்ட தென்னையின் இனிய இளநீருடனே ஒன்றாய்க் கலந்து
முந்நீர் உண்டு – இம்மூன்று நீரையும் அருந்தி
முந்நீர்ப் பாயும் – மூன்று நீரையுடைய கடலில் பாயும்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய – வேறு ஆதரவில்லாத பல மக்களும் வாழும் நல்ல ஊர்கள் பொருந்திய
ஓம்பா வீகை மாவேள் எவ்வி – பொருளை பெரிதென்று பத்திரப்படுத்தாது வள்ளல் தன்மை யுடைய பெரிய வேளாகிய எவ்வியின்
புனலம் புதவின் மிழலையொடு – நீர் பெருகிப் பாயும் கதவுகள் அமைக்கப்பட்ட மடைகளை யுடைய மிழலைக் கூற்றம் என்ற நாட்டுடன்
(கூற்றம் - தேசத்தின் ஒரு பகுதி)
கழனிக் கயலார் நாரை போர்விற் சேக்கும் – வயற் காட்டு நீர்ப்பரப்பில் உள்ள மீன்களை உண்ணும் நாரைகள் வைக்கோற் போரில் உறங்கும்
பொன்னணி யானைத் தொன் முதிர் வேளிர் - பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானை களையுடைய பாரம்பர்யம் மிக்க முதிர்ந்த வேளிரது
குப்பை நெல்லின் முத்தாறு தந்த – திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய – வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய!
நின்று நிலைஇயர் நின் நாண் மீன் - உனது வாழ் நாட்களாகிய மீன்கள் நின்று நிலைக்கட்டும்
நில்லாது படாஅச் செலீயர் நின் பகைவர் மீனே – உன் பகைவர்களுடைய வாழ்நாட்களாகிய மீன்கள் நிலைக்காமல் பட்டுப் போகட்டும்
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும் – உனக்கு இணையாக உள்ள முதிர்ந்த வாழ்நாளுடைய
உயிரொடு நின்று மூத்த யாக்கையன்ன – உயிருடனே இருந்து முதிர்ந்த உடம்பு போன்ற
நின் ஆடு குடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் – உனது வெற்றிக் குடிமக்களோடு மூத்த சீரிய குடியில் சிறந்து வாழும் வாட்போர் வீரர்கள்
தாள் வலம் வாழ்த்த - உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த
இரவன் மாக்கள் ஈகை நுவல – இரக்கும் பரிசிலர் உன் வள்ளன்மையை வாழ்த்த
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய தண் கமழ் தேறன் மடுப்ப – அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் பொற்கலத்தில் கொண்டு வந்து தரும் குளிர்ந்த நறுமணமுடைய மதுவை உண்டு
மகிழ் சிறந்து ஆங்கு இனிது ஒழுகு மதி பெரும – மகிழ்ச்சி பொங்க அங்கே சிறந்து வாழ்வாயாக பெருமானே!
ஆங்கு அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – அப்படியாக அவ்வொழுக்கத்துடன் வாழும் வல்லவரையே வாழ்ந்தோரென்று அறிவுடையோர் சொல்வர்
மலர்தலை யுலகத்துத் தோன்றி – பரந்த இவ்வுலகத்தில் பிறந்து
தொல்லிசை செலச் செல்லாது – தொன்மையான பெருமையோடு புகழ்பட வாழாது
நின்று விளிந்தோர் பலர் – மாய்ந்தோர் பலர் வாழ்ந்தோரெனக் கருதப்படமாட்டார்கள்.
பொருளுரை:
நெல்லை அறுவடை செய்யும் பெரிய உழவர் சிவந்த கதிரவனது வெயிலின் வெப்பத்தைப் பொருட் படுத்தாது தெளிந்த கடல் அலைகளின் மேல் பாய்வர். வலிமை பொருந்திய மீன்பிடிக்கும் படகுகளையுடைய வலிய மீனவர்கள் வெம்மை யுடைய மதுவை உண்டு மென்மையான குரவைக் கூத்துக்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடுவர். கடற் துவலையாலே தழைத்த தேன் பாயும் புன்னையின் மெல்லிய பூங்கொத்தால் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர் அழகிய வளையல்கள் அணிந்த மகளிரை முன்னிலைப் படுத்தி கைகளால் தழுவி ஆடுவர்.
வண்டுகள் மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறுமணம் கமழும் கடற்கரைச் சோலையில் கடல்முள்ளி மலர்களால் புனையப்பட்ட மாலையை அணிந்தும், கைகளில் அழகிய வளையல்கள் அணிந்த இளம் பெண்கள் பெரிய பனையினது நுங்கின் நீரும், பொலிவுடைய கரும்பின் இனிய சாறும், உயர்ந்த மணற்பாங்கான இடத்தில் விளைந்த திரண்ட தென்னையின் இனிய இளநீருடனே ஒன்றாய்க் கலந்து இம்மூன்று நீரையும் அருந்தி மூன்று நீரையுடைய கடலில் பாய்ந்து விளையாடுவர்.
வேறுபாடில்லாத பல மக்களும் வாழும் நல்ல ஊர்கள் அடங்கிய பொருளை பெரிதென்று பத்திரப்படுத்தாது வள்ளல் தன்மையுடைய பெரிய வேளாகிய எவ்வியின் நீர் பெருகிப் பாயும் கதவுகள் அமைக்கப்பட்ட மடைகளையுடைய நாடாகிய மிழலைக் கூற்றத்தையும், வயற்காட்டு நீர்ப்பரப்பில் உள்ள மீன்களை உண்ணும் நாரைகள் வைக்கோற் போரில் உறங்கும் பொன்னாலான அணிகலன் களை அணிந்த யானைகளையுடைய பாரம்பர்யம் மிக்க முதிர்ந்த வேளிரது திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய!
உனது வாழ்நாட்களாகிய மீன்கள் நின்று நிலைக்கட்டும்! உன் பகைவர்களுடைய வாழ்நாட்களாகிய மீன்கள் நிலைக்காமல் பட்டுப் போகட்டும்!
உனக்கு இணையாக உள்ள முதிர்ந்த வாழ்நாளுடன் உயிருடன் உள்ள முதிர்ந்த உடம்பு போன்ற உனது வெற்றிக் குடிமக்களோடு, மூத்த சீரிய குடியில் சிறந்து வாழும் வாட்போர் வீரர்கள் உன் முயற்சியையும் வலிமையையும் வாழ்த்த, இரக்கும் பரிசிலர் உன் வள்ளன்மையை வாழ்த்த, அழகிய வளைகளை அணிந்த பெண்கள் பொற் கலத்தில் கொண்டு வந்து தரும் குளிர்ந்த நறுமண முடைய மதுவை உண்டு மகிழ்ச்சி பொங்க அங்கே சிறந்து வாழ்வாயாக பெருமானே!
அப்படியாக அவ்வொழுக்கத்துடன் வாழும் வல்லவரையே வாழ்ந்தோரென்று அறிவுடையோர் சொல்வர். பரந்த இவ்வுலகத்தில் பிறந்து தொன்மையான பெருமையோடு புகழ்பட வாழாது மாய்ந்தோர் பலர் வாழ்ந்தோரெனக் கருதப்பட மாட்டார்கள்.
திணை: இப்பாடல் பொதுவியல் திணை ஆகும். வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணை களின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
துறை: உனது வெற்றிக் குடிமக்களோடு, வாட்போர் வீரர்கள் உன் வலிமையை வாழ்த்த, பரிசிலர் உன் வள்ளன்மையை வாழ்த்த, மகிழ்ச்சி பொங்க ஒழுக்கத்துடன் வாழும் வல்லவரையே வாழ்ந்தோ ரென்றும், இவ்வுலகத்தில் பிறந்து பெருமையோடு புகழ்பட வாழாது மாய்ந்தோர் வாழ்ந்தோரெனக் கருதப்படாததாலும் நிலையாமை பற்றிக் கூறி, இனிது ஒழுகு என்றமையால் இப்பாடல் பொருண் மொழிக்காஞ்சித் துறையாகும்.