அம்மா...

என்னை சுற்றிய சப்தங்கள் எல்லாம்
நிசப்தம் ஆகிப் போன இந்த இரவில்
மனது
கொஞ்சம் கொஞ்சமாய்
அம்மா என்ற ஒற்றை வார்த்தைக்குள் தஞ்சமடைகிறது...
.மனது கொஞ்சமாய் கனமாக
வார்த்தைகள் ஊமையாகிறது...
முகம் காணும் முன்னே
முழுதாய் வாழ்ந்தவள் எனக்காக
நான் கேட்கும் எந்த குரலிலும் இல்லாத ஆறுதலும்
நான் பார்க்கும் எந்த உருவத்திலும் இல்லாத நம்பிக்கையும்
அவளுடையதாகத்தான் இருக்கிறது எல்லாத் தருணங்களிலும்...
இன்பத்தையும் துன்பத்தையும் எனக்களித்த
உறவுகள் எத்தனையோ இருக்க
இன்பத்தை மட்டுமே கொடுத்தவள் இன்றுவரை...
சொல்லி முடிக்க இந்த இரவும் பத்தாத
இன்னும் எத்தனையோ தருணங்கள்...
ஆம்
தன் சந்தோசங்களையெல்லாம் மொத்தமாய்
முத்தமிட்டு தொடங்கியதிலிருந்து,
நினைவும் நிஜமுமாய் நகர்கிற இந்த கணம் வரை,
மனது அவளின் நினைவுகளில் சலனமற்றுப் போக
கண்களின் ஓரமாய் வழிகிற கண்ணீர்த் துளிகளை
துடைக்க மனமில்லாதவனாய்
அவளின் நினைவுகளில் தொலைந்துபோகிறேன் நான்...
-சதிஷ்குமார்.மு