உன் போல் வாசம் வீச கன்னி என்னுள் புது சுவாசம் பூசு....

என் தாயின் கர்ப்பம் இறங்கி
மண் மீது மகளாக மலர்ந்து
பெண் எனும் இனத்தில்
வெண் மேகமாய் நான்....
என் வீட்டுத் தோட்டத்தில்
மண் மீது செழித்த
உன் தாயின் கர்ப்பம் திறந்து
வெண் மதியேன நீ!!!!!
அதிகாலை அவனி விழிக்கும் பொழுது
அயர்ந்த உன் முகம் மலர ஒளிரும் பகலவன்
ஆதி பகவன் முதல் ஆதி மனிதன் வரை
அடர் கூந்தல் அலங்கரிக்கத் தேடும் எம்மினம்
அமிழ் தேனை அள்ளிக் குடிக்க
அலையும் வண்டினம் என
அனுதினமும் அழகாகும்
அன்னம் உன் மவுசு குறைவதில்லை......
காதலனுக்காகக் காத்திருப்பதில்
கவியாய் நீயும் நானும் ஒன்றே
பருவமடைந்து உனைப்போல் பூத்து நான்
உருவமடைந்து நல் மணம் வீசி ஓவியமாய் நீ.....
கண்ணனை மீரா தன் உளம் உருகி
காதலித்த போதும் முதலில் அவன் உடல் தழுவிக்
கரும் உடல் நழுவியவள் நீதானே....
மண் மீது என்னாலும் எல்லோரும்
என் இனம் வெறுப்பது போல்
உன் இனம் என்னாலும்
என் இனம் வெறுப்பதில்லை....
கவி புனையும்
கவிகளின்
கற்பனையில்
காலந்தோறும்
கட்டிப்பிடித்துப் புரள்பவர்கள்
கண்ணே நீயம் நானுமே!!!! .
நீ அறியாத் தலைவன்
நீலவான எல்லை முதல்
நீலக் கடல் ஆழம் வரை
நினைவில் இல்லை....
இதழ் மணம் பரப்பி உன் மனம் கவர்
இனியாரை இழுப்பது போல்-என்
இல்லத் துணை
இனியானையும் உன் மணம் வீசி
இழுத்து விடு
இவள் மனதோடு அவன் மனம்
இணைத்து விடு.....
உனைச்சூடி நாள்தோறும்
உனைப்போல உதிரும்
உன் தோழி மனம்
உவகை அடைய
உன் மந்திரப் புன்னகை மொழி
ஊதி என் மன்னவன் மனம்
உளறக் காதல் மொழி குழற
உறுதுணை செய்......
காதல் வானில் உன் போல் வாசம் வீச
கன்னி என்னுள் புது சுவாசம் பூசு....