பெண்
பெண்ணே! உன்னில்
எத்தனை தியாகங்கள்? எத்தனை தவிப்புகள் ?
எத்தனை வேள்விகள்? எத்தனை வெறுமைகள் ?
எத்தனை கேள்விகள்? எத்தனை கெடுபிடிகள்?
எத்தனை கடமைகள்? எத்தனை கண்டிப்புகள் ?
பெண்ணே! உன்னில் எத்தனை அவதாரங்கள்!
தன்னுயிர் ஈந்து, மனதுள் பதைத்து,
தனக்குள் தவித்து, சுகமென சுமந்து,
ஜனனம் தர மரணவலி தாங்கி, தன்னுயிர் தரும் இறைவனின் பிரதிநிதியாய் ....
அம்மா, மா, அன்னை, மாதா, ஆத்தா
என்று ஒரு அவதாரம்!
பெற்றோரின் எண்ணமறிந்து , கணவரின் குணமறிந்து, மக்களின் மனமறிந்து, பிறந்த வீட்டின் மானம் காத்து, புகுந்த வீட்டின் மாண்பு காத்து, குடும்ப விளக்கில் தன்னையே திரியாக்கி, சுற்றம் போற்றும் குலமகளாய் வலம் வந்து,....
மனைவி, தாரம், இல்லாள், மனையாள், இல்லத்தரசி...
என்று ஒரு அவதாரம்!
பெற்றோர் மகிழ குழவியாய் , குழலின் இனிமை மிஞ்சும் குரலால் அழைத்து, தத்தி தத்தி நடந்து, நதியாய்க் குதித்தோடி, கல்விக் கரையேறி, பெற்றோர், உற்றார் மனம் வாழ்த்த மண மேடையேறி, நாற்றாய் வேற்றிடம் நட்ட போதும் நலியாமல் நற்பெயரீட்டும் ...
மகள், பேதை, பெதும்பை, மங்கை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண்...
என்று ஒரு அவதாரம்!
இன்னும் உந்தன் அவதாரங்கள் எத்தனை எத்தனையோ ?