வலி தந்துச்சென்ற ‘வாலி’

வாலிப கவியே!-உன்னால்
வாணிபம் பெற்றோர் எண்ணோர்!
காவிய கவியே!-உன்னால்
மேதாவி ஆனோர் பல்லோர்!

மாலியின் ஓவியப்பள்ளியில்
ஜாலியாய் வலம் வந்த நீ
வாலியாய் ஆன விந்தையை
‘கோலிவுட்’ நன்கு அறியும் !

சாவி போட்டால்தான் வாகனம் ஓடும் - வாலி நீ
சீவல் போட்டால்தான் ‘பா-கனம் மெறுகேறும்!
ஆளில்லாத லெவல் கிராஸிங்காம், இனி
வாலி இல்லாத தமிழ்த்திரை உலகம்!

உன்னாவி பிரிந்ததுக் கண்டு
தன்னாவியே பிரிந்ததாய் கலங்குகிறான் கவிஞன்!
காலனையே காரி உமிழ்ந்த வாலியே!-உன்
காலமெல்லாம் வாரி தந்தாய் பாடலை!

பொன் நகையே அணிந்தாலும்
புன்னகையை மறைப்பவன் கவிஞன்!
ஆனால் உன் நகைச்சுவையைக் கண்டு
அறுசுவை உண்ட திரைத்துறை
உன் மூச்சு நின்றதுக்கண்டு
காய்ச்சலால் கதறுகின்றது!

இந்த வாழ்வே மாயம் என்றாய்
அந்த வாழ்விலும் உச்சம் கண்டாய்
எந்த தாழ்வும் பாராமல் - பாடலெழுத
வந்தவர்களையெல்லாம் சொந்தம் கொண்டாய்!

‘பா’ வரிகளை மாமழைப்போல் பொழிந்த மாகவியே!
உனக்குஇறுதி மரியாதை செலுத்தும் முகமாக, மயாண சாலையெங்கும்
வருண பகவானே இறங்கிவந்து கருணை கண்ணீர் வடித்தது
வாலி என்கின்ற
ஸ்ரீரங்கம் ரெங்கராஜனுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் !

ஒரே வானம்!
ஒரே பூமி!
ஒரே வாலி!


உன் ஆத்மாவின் ராகங்கள்
பரமாத்மாவின் பரந்த மனதில்
ஓங்காரமாய் ரீங்காரம் இடட்டும்!
ஏனெனில்
ஆங்காரமற்ற அசூர கவி நீ!
மீண்டும் பிறந்து வந்து
தமிழ் ஆகாரம் அளி அனைவருக்கும்.
***************************************************************************
கண்ணீருடன்
இரா.மணிமாறன்
19/07/2013

எழுதியவர் : இரா.மணிமாறன், கைபேசி : (20-Jul-13, 12:09 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 75

மேலே