இந்த மழையும்....................
சில்லென்று மழைநீரில்
நனைய ஆசைதான் .....
ஒவ்வொரு மழையிலும்.........
...................................................................
இடிக்கு செவிபொத்தி
மின்னலுக்கு விழி பொத்தி
சட்டை நனைய
ஆற்றங்கரையில்
புரண்ட பொழுதுகளில்
தோன்றின
இது என் மழை .......
......................................................
முத்தமாகவே
மொத்திச் சென்றன
ஒவ்வொரு துளிகளும் ...
கால்களுக்கிடையில்
ஊடுருவும் நீர்த்துளிகளுடன்
குடிபெயர முயன்றன
நான் கட்டிய
மணல் வீடுகள் .........
...............................................................
இன்னொருநாள்
வாலிபம் சுமக்கையில்
என் மார்பில் ...
முதுகில் .. வயிற்றில்
கோலமிட்டு சிரித்தன
மழையின் விரல்கள் ....
..........................................................................
உடைந்து விழும்
வளையல்களாய்
பனை ஓலையில்
முட்டி சிணுங்கிய
மழையின் ஒலிகள் .........
.......................................................................
வேகமாய் சுழலும்
காற்றினூடே
இமைகளின் நுனிதனை
கவ்வி கடித்த
நீர்த்துளிகள் ................
.........................................................................
மோகத்தின் உஷ்ணத்தை
விழுங்கித் தின்று
சுவாசங்களுக்குள்
குளிர்ச்சியாய் நுழைந்தன....
மழையின் இதழ்கள் ...
.........................................................................
தழுவிச் சிரித்தன
மழைத்துளிகள்
காற்றுக்குள் சூடிகொண்ட
மண்வாசனையாய் ....
......................................................................
நீர் வரைந்த
கோலங்களில்
நேசத்துடன் மலரிட்டு
ரசித்த மரங்கள் ....
..................................................................
பிரிய மனமின்றியே
இலைகளின் இடுக்குகளில்
பொத்திக்கொண்டிருக்கும்...
செடிகள் எழுதிய
காதல் கவிதைகள் ..
ஈரத்துளிகளாகவே....................
...................................................................
அண்டவெளியில்
நான்மட்டும்
நனைபவனாய் ....
காதல் பரவசத்தில்
மழையோடு..
கலந்து களித்த நாட்கள் .....
..........................................................
நினைவுகள் நெஞ்சை
தொடும்போதெல்லாம் ..
மழையில் நனைந்துவிட
ஆசைதான் ...
ஒவ்வொரு மழையிலும் ..
விழிகள் தேடின
என் மழையை..............
..................................................................
நேற்றைய
அடைமழையில்
கதவுகளுக்கு வெளியே
மேனியெங்கும் ..
மண் குழைத்து
மழைநீரில் புரளும்
மகனின் குதூகல
சத்தங்கள்
மீண்டும் உணர்த்துகின்றன
இந்த மழையும்
என்னுடையதில்லை என்று .............