ஆடி....
மின் விளக்கு தோரணங்கள்
சாலைதோறும்.... வீதிதோறும்..
மின்சார அபகரிப்பில்
இரவினை பகலாக்கி...!!!
ஒலிப் பெருக்கி இரைச்சலிலே
அரைமணி பக்திப் பாடல்...
குத்துப் பாடல்களோ
அடுத்த மணி நேரங்களில்...!!!
ஆடி மாதம் பிறந்துவிட
அவதரிப்பாய் பக்திமான்கள்...
நெற்றியிலே விபூதி பூச்சு
கைகளிலே உண்டியலாச்சு...!!!
அம்மனுக்கு திருவிழாவாம்
செலவிற்கே பணத் தேவை...
ரசீது புத்தகமோ இருவிதமாய்
கோயிலுக்கும்.... குடிப்பதற்கும்...!!!
தின வசூல் வெகு ஜோராய்
திருவிழா முடியும்வரை...
இரண்டுவித பணவேட்டை
இரவு வந்தால் அடிப்பார் "பட்டை"..!!!
ஆடியிலே சூறைக் காற்று
பெருகும் அம்மன் அருள் ஊற்று
கூழ் ஊற்று பொங்கல் வைப்பு
அம்மன் கோவிலிலே சிறப்பு...!!!
ஆடி மாதம் பிறந்துவிட்டால்
திருமண மேளதாளமேது???
வீடு மாற்றம் செய்வதற்கும்
ஆடி மாதம் ஆகாது...!!!
சித்திரையில் குழந்தை பிறப்பு
ஆகாதாம் தம்பதியர்க்கு....
கணவன் மனைவி இருவருமே
ஆடிமாத கட்டாய பிரிப்பு....!!!
மொட்டையடித்து காது குத்து
தாய் மாமனுக்கோ பணவேட்டு....
தடபுடலாய் வரிசை வைப்பு - ஆடியிலே
முடி இறக்காமலே மொட்டையடிப்பு...!!!
தொழுதிடவும் உழுதிடவும்
உகந்த நல்ல மாதமன்றோ??
என்றும் ஆடியிலே தேடி விதை
விளைச்சல் அமோகம் காணுமன்றோ ??
ஆடிப் பெருக்கு அமாவாசை
இம்மாதத்திலே பெருமை
புனித நீராடி மக்களுமே
வாழ்வினிலே அடைவர் வளமை...!!!