தீண்டத்தகாத கவிதை வரிகள்...!!! (Mano Red )

தீயினால் சுட்டதோர் புண்ணை விட
தீண்டாமையினால் சுட்ட புண்
காலத்தினும் ஆறாமல்
நெஞ்சை வருடும் வடுக்களாகவே
வீதியில் அலைகிறது..!!

இறைவன் படைப்பில்
உயர்வு தாழ்வு என யார் பிரித்தது,
எந்த வகையில் தாழ்ந்து விட்டான்
தாழ்த்தப்பட்ட குடிமகன்..!!

அவன் வெட்டிய குளத்தின் நீரையும்,
விதைத்த நெல்லின் ருசியையும்,
நாவில் படாமல் தின்றுவிட்டு,
தாழ்த்தப்பட்டவன் என
நாக்கின் மேல் பல் போட்டு
அவன் மேல் எச்சில் துப்பினால்
எந்த வகையில் நீ உயர்ந்தவன்...???

தொப்புள் கொடி அறுக்கவும்,
சாவுக்கு கோடித்துணி போர்த்தவும்,
முடி வெட்டி அழகு படுத்தவும்,
வெள்ளையாய் சலவை செய்யவும்,
சிரித்தே சாக்கடை கழுவவும்,
தேவைப்படுகிற அவனைத்தான்,
உயர்குடி கால்கள் எட்டி மிதித்து
மேன்மை பெற வேண்டுமா..??

கோவில் சுத்தம் செய்யும் அவன்
கோவில் நுழைய அனுமதி இல்லை,
தேயிலை தயாரிக்கும் அவனுக்கு
தேநீர் கடையில் இடமில்லை,
செருப்பு தைக்கும் அவனுக்கோ
செருப்பு போட உரிமையில்லை..!!
ஆண்டவனுக்கும் அடுக்காத
அநியாயங்கள் தான்
அந்த உயர்குடி மக்களின் நியாயங்கள்...!!!

ஒருவேளை தாழ்த்தப்பட்டவன்
வேற்றுகிரக வாசியாக இருப்பானோ..??
உயர்குடியில் பிறந்தவர்கள்
மனிதர்களாக இல்லாத போது,
மனிதனாக இருக்கும் அவன்
பூமியில் வேற்றுகிரக வாசி தான்...!!

ஒருவேளை அந்த உயர்குடிமக்கள்
இக் கவிதை வரிகளை
படிக்க நேர்ந்தால்,
தீண்டத்தகாத வரிகள் என
ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள்..!!!

எழுதியவர் : மனோ ரெட் (7-Aug-13, 1:01 pm)
பார்வை : 357

மேலே