கடவுள்

அனுபவங்களின் ஆழப் படுகைகளில்
படிமங்களாய் தெரியும் எழுத்துக்களே
கடவுள் .
அவனது பரிமாணங்களை புரிந்து கொள்ள
'தேடல்' என்கின்ற அனுபவமே தலைவாசல்.

வயிற்றுப் பசிக்கு உணவிடுபவனல்ல கடவுள்
உணவோடு சேர்த்து நெல்லையும் தந்து
விதைக்கச் சொல்லி
அதன் வழி உண்டுவாழச் சொல்பவனே கடவுள்.

பிறவிகளை முடித்து வைப்பவனல்ல கடவுள்
பிறந்து பிறந்து மீண்டும்
பிறர்பால் காட்டும் அன்பால்
பிறர் நலம் ஓம்புபவனே கடவுள்.

துன்பங்களின் தீர்வல்ல கடவுள்
மனித மனங்களை புடம் போட்டு
மகத்தானதாய் மாற்றி
தன்னம்பிக்கைகளையே வாழ்வின்
ஆதாரக்கோடென்று உணர்த்துபவன் கடவுள் .

அறிவுரைக்க வந்தவனல்ல கடவுள்
எந்திர வாழ்க்கைகிடையே
மறந்துப்போன புழுதி மனிதனின்
தனிப்பட்ட சோகங்களைக் கூட
கேட்கக்கக்கூடிய 'காதுகளாய்' கடவுள்.

அநீதிகளின் காவலன் அல்ல கடவுள் !
கேள்விகள் கேட்க மறந்த
மனித சமூகத்து மத்தியில்
நெஞ்சு பதைபதைத்து நியாயங்களை
வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும்
வெளிவரப் போராடுபவனே கடவுள்.

மூட நம்பிக்கையல்ல கடவுள் !
மெய்பொருளை மறைத்து நிற்க்கும்
சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்
உடைத்தெறிந்து
மெய்ஞானப் பாதையை தானுணர்ந்து
பாமரனும் பயணிக்கும்படி எளிதாக்கி
அதில் இட்டுச் செல்பவனே கடவுள் .

ஊழிக்கூத்தின் காரணியல்ல கடவுள் !
ஊழியின் கொடுங்கரத்தில் சிக்கி இருப்பினும்
உடைந்துபோகா திண்மமும்
காலம் வெட்டிப்போனாலும்
தானாய் ஒட்டிக்கொள்ளும் மனமுமே கடவுள் .

மதக்குறியீடுகளில் வசிப்பவனல்ல கடவுள் !
காலப்புரட்டலில் குன்றிய மனிதர்தம்
வாழ்வின் தேவைகளை
விழியால் கண்டதுமே
மடமையையும் தாண்டி
மனிதாபிமானக்கை நீட்டி
ஈகையால் தன்னை இழப்பவனே கடவுள் .

இல்லை என்ற பிரம்மத்தில் தோன்றி
இருப்பதில் நிறைந்த இறைவனை
இல்லையில் மட்டும் தேடிவிட்டு
இல்லை என மொழிவது மடமை .

புறத்தே தேடுவோர்
கடவுளை அடைவதில்லை
தன்னிலிருந்து விடுதலைப் பெற்று
அகத்தை அகழ்வு செய்கையில்
உள்ளம் உரிந்து வெளிவரும்
விசுவரூபப் பேரானந்தமே கடவுள்.

பற்றற்ற பாசத்திலும்
பாரபட்சமற்ற அன்பிலும்
காணப்பெறுவதே மெய்யானக் கடவுள் .

இம்மையில் மனிதருள்
காணப்பெறா கடவுள் எவரும்
மறுமையில் மலர்ந்து
சுவர்க்கம் தருவார் என்பதை
மறுதலி மனமே ! நீ
மறுதலி மனமே .

எழுதியவர் : திகம்பரன் (14-Aug-13, 7:09 pm)
பார்வை : 82

மேலே