என் நண்பர் திருத்திய கவிதை..!
(எனது படைப்பை படித்துவிட்டு நண்பர் எசேக்கியல்காளியப்பன்... அவர்கள் மின்னஞ்சலில் திருத்தி அனுப்பிய கவிதை அப்படியே உங்கள் முன் வைக்கிறேன்..! பாராட்டுக்கள் அவர்க்கே உரியது..!)
அகிம்சை காத்தஎன் தாய் நாடே! - உன்னுள்
அமைதியை இழந்ததேன் தாய் நாடே!
ஒற்றுமை ஒலித்தஎன் தாய் நாடே! -இன்று
ஓலங்கள் ஒலிப்பதேன் தாய் நாடே!
பனித்துளி போன்றவர் பேச்சிலெலாம் -இன்று
பாறைகள் அக்கினி மூச்சுகளாம்!
மதங்கள் வளர்ந்தன நன்றெனவே! -இன்று
மதங்கொண்டலையுதே கொன்றனவாய்!
மனிதராய்க் கைகள் இணைந்தவரே -இன்று
மனிதனை குண்டினில் இணைத்ததுமேன்?
கும்பிடப் போனதும் ஓர் காலம்! -இன்று
குண்டுகள் வெடிக்கவே ஏன் ஓலம்!
காதலும் வளர்ந்ததே நன்றெனவே! -இன்று
சாதியும் வளருதே கொன்றனவாய்!
சிறைக்குச் சென்றவன் தலையானான்!-இன்று
சிறையிலே தலைவன் பிறப்பானேன்!
சுருட்டிய பேர்களை விரட்டினோமே!-இன்று
சுருட்டவே ஆட்களைத் திரட்டுவோமோ?
நீர் நிலம் சோலையாய் நீயிருந்தாய்!-இன்று
கூர்படும் பாலையாய் ஏன்திரிந்தாய்?
தொழில்வழி வளர்வது தேசமன்றோ! -அன்றி
மொழிவழிப் பிரிவதும் நாசமன்றோ!
வளமையும் மகிழ்ச்சியும் கொண்டே-எனை
வளர்ப்பவள் கைகளில் குண்டோ?
களமிதில் சுதந்திரம் ஏனடைந்தோம்?- இன்று
களங்கமும் கையுமாய் ஏனுடைந்தோம்?
என்று தொலைந்தனை தாய் நாடே! -உனை
எப்படித் தேடுவேன் தாய் நாடே!
என்றும் நிலைத்திடத் தாய் நாடே! -உனை
எப்படி வாழ்த்துவேன் தாய் நாடே!
========
---எசேக்கியல்காளியப்பன்...