இறவாக்காதல் (5)
....இறவாக்காதல்......
(பாகம் 5 )
காலமும் அலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை.. கவிதாவின் வாழ்விலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. தந்தையின் மறைவுக்கு பின் மாமாவுடன் வேறு மாநிலத்திற்கு சென்று, அந்த சூழ்நிலைக்கேற்ப அம்மாவும் அவளும் தம்மை பழக்கப்படுத்திக் கொண்டனர். வேதனைகளும் விரக்தியும் தம் கல்வியை எந்த அளவிற்கும் பாதித்து விடாதபடி அவள் தம்மை பக்குவப்படுத்திக் கொண்டாள். என்னதான் நாள் முழுவதும் படிப்பிலேயே முழு கவனத்தை செலுத்தியிருந்தாலும், இரவு படுக்கும் முன் மானசீகமாக கண்ணனிடம் பேசிவிட்டு தான் படுப்பாள். என்றாவது ஒருநாள் நிச்சயம் அவனை சந்திப்பேன் என்ற மாளாத நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் உத்வேகத்துடன் நகர்த்தி வந்தாள்.
ஆறாம் படிவத்தில் சிறந்த தேர்ச்சியை பெற்று, பல்கலைக்கழகம் சென்று ஒரு பட்டதாரி ஆசிரியை ஆனாள். பட்டமளிப்பு வைபவம் முடிந்ததும், அந்த சீருடையை கழற்றாமலேயே வீட்டிற்கு வந்து, தன் அப்பாவின் ஆளுயர புகைப்படத்திற்கு முன் நின்று வணங்கினாள். "அப்பா, என்னை ஆசிர்வதியுங்கள். உங்கள் விருப்பப்படி பட்டதாரி ஆசிரியையாகிவிட்டேன்.. இனி மேலும் என்னை சிறந்தமுறையில் வழிநடத்த உங்கள் ஆசிவாதம் தேவை அப்பா..." கண்களில் கண்ணீர் வழிய கவிதா தன் தந்தையிடம் மானசீகமாகப் பேசினாள். அருகில் நின்ற அவள் அம்மா கண்ணீர் மல்கிய விழிகளுடன் தன் அன்பு மகளை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள்.
அன்று இரவு அவளால் நித்திரை கொள்ள முடியவில்லை. கண்ணனின் நினைவு அதிகம் வருத்தியது. தன்னைப் போல் அவன் இருப்பானா? "அவன் இருப்பானா" என்று நினைக்கையில் மனம் சிணுங்கியது. "என்ன, இன்னும் சின்னபிள்ளை என்று நினைத்துக் கொண்டாயா... கண்ணன் இப்போது ஒரு வாலிபன்.... இனியும் அவனை மரியாதையில்லாமல் அவன் இவன் என்று சொன்னால் எனக்கு கெட்டக்கோபம் வரும் ஆமாம்..." அவள் மனசாட்சி ஏகத்திற்கு அவளைத் திட்டி தீர்த்தது. தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள். அவள் உணர்வுகளைக் கண்டு அவளே நாணமுற்றாள். வழக்கம் போல் படுக்கும் முன் கண்ணனுக்காக கவிதை எழுதும் புத்தகத்தை எடுத்தாள். மனதில் தோன்றியவற்றை ஏக்கத்துடன் எழுதினாள்.................
கண்ணா.........
காட்சியில் மறைந்தாலும்,
கண்ணுக்குள் நிறைந்திருப்பவனே
அந்த நாள்.....
நீ பிரிந்த
நாள் ஆரம்பித்து.
இந்த நாள் வரை..........,
எண்ணிக்கையிலடங்குமா
என் வேதனைகளும், சோதனைகளும்.....
காலை, பகல், மாலை, இரவு,
எல்லாப் பொழுதுகளிலும்,
என் கண்களும் மூடவில்லை,
கன்னங்களும் காயவில்லை...
சொல்லி மாளாது... சொல்லிலும் அடங்காது
என் சோகங்களும், தொடர்ந்திடும் வேதனைகளும்..
வெந்தணலில் என்னைத் தள்ளிய விதிக்கு
விளையாட வேறு யாரும் கிடைக்கவில்லையா?
வாழ்க்கைப் பயணம் வரை வழித்துணையாய்
வருவாய் நீயென்று வழிமேல் விழி வைத்து
காத்திருக்கையில்..........
இரயில் பயணி போல், இடையிலேயே
உன் பயணத்தை நிறுத்தி
எங்கோ சென்றுவிட்டாயே.
நெடுந்தூரம் நீ சென்று விட்டதால்,
சென்றதிசை அறிய முடியாததால்,
சந்தோஷங்களும் தூரமாகி விட்டன...
விதியெழுதிய எழுத்துக்கு விடை காண முடியவில்லை.
பழகிய காலம் நெஞ்சில் இனிக்கின்றது....
அதனாலேயே, மீண்டும் மீண்டும் வலிக்கின்றது...
வந்து விடு... என் சுவாசம் தந்து விடு....
எண்ணங்களில் உதித்த ஏக்கங்களை, கவிதை வழி எழுத்தினில் இடமாற்றிய திருப்தியில், சிறுவயது பையன் முகத்தை ஒரு இளைஞனின் உடம்பில் ஒட்ட வைத்து, கண்ணனை உருவகப்படுத்தும் முயற்சியில் தோல்வி கண்டு அப்படியே உறங்கிப்போனாள், அவள் நம்பிக்கையிலும் ஒரு விடிவெள்ளி உருவாகி மிக அருகில் வந்து கொண்டிருக்கின்றது என்பதை அறியாமல்.
மீண்டும் பயணிப்போம்......!