உலக உணவு தினம்

ஆண்டாண்டு காலமாய்
அகிலம் இயங்குகிறது
அன்றுமுதல் இன்றுவரை
அகிலத்தை ஆட்டிப் படைக்கும்
அல்லல்கள்... பசியால்!

கலியுகம் இப்போது
கணினி யுகமாகியும்
கழியவில்லை இன்னமும்
ஒரு கண்ணீர்க் கதை

சோமாலியாவின் சோகமும்
ஒரிசாவின் ஓலமும்
ஒருமுறையேனும் உங்கள்
உள்ளத்தை உருக்கவில்லையா?

உலக உணவுதினம் என்று
உரைக்கப்படும் இந்த
ஒரு நாளேனும்...
உட்கார்ந்து சிந்தியுங்கள்...

பசிக்காமலே புசிப்பவர்கள்
பசியையே பார்த்திராதவர்கள்
புசித்தால் பிணிவருமோ என
பயத்தோடு சாப்பிடும்
பணக்காரர்களுக்கு மத்தியில்...
ஒட்டிய வயிறோடும்
ஒடிந்த தேகத்தோடும்
பசியும் பட்டினியுமாய்
பலகோடி மக்கள் !

கால்வயிற்றுக் கஞ்சியில்லாமல்
காணாமல் போன வயிறுகளோடு
கால்பாகம் பேர்- இந்தச்
சுதந்திர பூமியில் இன்னும்
சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

எந்த ரயிலுக்காக
இந்த மக்கள்
இத்தனை நாளாய்
பிளாட்பாரங்களில் படுத்து
காத்துக் கிடக்கிறார்கள் ?

இதோ சொல்கிறார்கள்...
குளித்த பின்
குடிக்க வேண்டுமாம்
குடிப்பதற்கு எங்களிடம்
கூழ்கூட இல்லை..
தண்ணீர் கூட
தனித்தனிப் பொட்டலங்களாய்- கடைகளில்!

பசித்த பின்
புசிக்க வேண்டுமாம்
பல நாட்களாய்
பசித்துக் கொண்டே இருக்கிறது
புசிப்பதற்கு எங்களிடம்
பசியைத் தவிர வேறில்லை

எச்சில் இலைகளுக்குள்ளே
எங்காவது கிடைக்குமா என்று
எதையோ தேடுகிறார்கள்
எமனை ஏமாற்றிட எண்ணி..
ஆம்
அவர்கள்
உயிரைத் தேடுகிறார்கள்
உறுதியற்ற உடலோடு !

பிஞ்சுப் பூக்களைப் பார்த்தால்
நெஞ்சு கனக்கிறது
அம்மா வாங்கித் தந்த
அருமையான பிஸ்கட் பாக்கெட்டுகளை
அடுக்கடுக்காய் அமைத்து விளையாடும்
அந்தச் சிறுவர்கள் ஒருபக்கம்
உடல்பசி ஆற்றிட
உணவு ஏதுமின்றி
யாருக்கு அதிகம் என்று
மார்பு எலும்புகளை
மண்டிபோட்டு எண்ணி விளையாடும்
மர்மச் சிறுவர்கள்
மற்றொரு பக்கம் !

நிலவினைக் காட்டி
அன்னை எங்களுக்கு
அமுது ஊட்டினாள்
எங்கள் வாழ்க்கையும் தேய்பிறையாய்...

பள்ளிக் கூடங்களில்
பாடம் நடத்த
எலும்புக் கூடு தேவையில்லை
எலும்பு மாணவர்கள்தான்
எக்கச்சக்கமாய் இருக்கிறார்களே !

ஓட்டை விழுந்த புல்லாங்குழல்கள்
ஓசை தர மறுக்கின்றன
ஊத முடியாமல் மனிதர்கள்...

சோதனைகளுக்குள்ளே
சாதனைகளைத் தொலைக்கும்
சாமானியர் எத்தனையோ ?

சேரிவாழ் மக்களுக்கு
சேரவில்லை உணவு
சாலையோர மக்களுக்கு
காணவில்லை வயிறு

சாக்கடைக்குள்ளே
சாமர்த்தியமாய் பதுங்கிக் கொண்டு
உள்ளவையனைத்தையும்
ஊழல் செய்யும்
பெருச்சாளிகள் உள்ளவரை
பெருகத்தான் செய்யும்
பசிப்பேய்கள்!

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி
உணவில்லா மக்கள்
ஒன்றா இரண்டா
உன் சொல்படி செய்தால்
எத்தனை முறைதான்
இந்தத் தரணியை அழிப்பது?

எல்லாம் இருக்கட்டும்
உங்களுக்கு ஒரு கேள்வி
மனிதம் வாழ்கிறதா?
ஒரு பக்கம்
பசியோடு போராட்டம்
விளைவு இடுகாடு
மறுபக்கம்
தீவிரவாதத்தோடு போராட்டம்
விளைவு சுடுகாடு

இனி என்ன ஆகும்
இந்த பூமிக்காடு?

கொஞ்சம் வெளியே
எட்டிப் பாருங்கள் சித்தார்த்தர்களே ..
சில்லறைக்காசுகளிலும்
ஈயக் காசுகளைத் தவிர
ஏனையதைப் பார்த்திராத
ஏழைகளைக் கொஞ்சம்
எண்ணிப் பாருங்கள் ..
ஒருவேளை உணவின்றி
உயிரோடு விளையாடும்
உயிர்களைக் கொஞ்சம்
உற்றுப் பாருங்கள்...
நீங்கள்
புத்தர்களாக மாற வேண்டாம்
மனிதத்தைக் காக்க
மனிதர்களாக மாறினால் போதும்
உயிர்களைக் காக்க
உங்களால் இயன்றதை
உதவினால் போதும்

அப்போது
இந்த பூமிக்காடு
எப்போதும் ஒரு பூக்காடு!!!

எழுதியவர் : முகவை என் இராஜா (17-Aug-13, 2:02 pm)
பார்வை : 147

மேலே