படித்ததில் பிடிக்காதது
ஆந்திர மாநிலம், திருப்பதி கோவில் வளாகத்தில் 14 வயது சிறுமி மாங்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அந்த சிறுமி இரவு நேரத்தில் கோவில் வளாகத்திலேயே தங்கினார். இந்த சிறுமி யார் எப்படி வந்தார் என்பது தெரியாததால் இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அந்த சிறுமியை பிடித்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியது. சென்னையை சேர்ந்த அந்த சிறுமியை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால், அந்த சிறுமி திருப்பதி கோவிலுக்கு வந்து மாங்காய் வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சிறுமியை ‘சைல்டு ஹெல்ப் லைன்’ நிர்வாகிகளிடம் ஆந்திரா போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள், அந்த சிறுமியை சென்னையிலுள்ள நிர்வாகிகள் மூலம், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் ஒப்படைத்தனர். சிறுமியின் சோக கதையை கேட்டறிந்த டி.ஜி.பி., இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம், அந்த சிறுமி கொடுத்த பரிதாபமான வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-
என் பெயர் அபர்ணா (வயது 14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் குழந்தையாக இருக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். என் அம்மா சிறுமலர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னை வளர்த்தார். கடந்த ஆண்டு 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி பெரம்பூர், பி.பி. காலனியில் ஆசிரமம் அமைத்து குறிசொல்லும் அறவழி சித்தர் (வயது48) என்பவரிடம் என் அம்மா அழைத்துச் சென்றார். அவர் எனக்கு விசேஷ இரவு பூஜை செய்யவேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடுஇரவு பூஜை செய்வதாக கூறி, தனி அறையில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூதியை தடவி, தீர்த்தம் கொடுத்தார். நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் கற்பழித்து விட்டார். இந்த கொடூர சம்பவம் நடந்தபோது, என் அம்மா வீட்டுக்கு வெளியில் காத்திருந்தார். நான் அழுது கொண்டே வெளியில் வந்து, நடந்த சம்பவத்தை என் அம்மாவிடம் கூறினேன்.
அதற்கு அவர், ‘சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மைதான் செய்வார்’ என்று அறிவுரை கூறினார். இதன்பின்னர், அடிக்கடி என்னை அறவழி சித்தரிடம் என் அம்மா அழைத்துச்சென்றுவிடுவார். அவரும் என்னை அடித்து மிரட்டி பலமுறை கற்பழித்தார்.
பின்னர், அவரது நண்பர்கள் என்று கூறி சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கடிகார கடை வைத்து இருக்கும், குமார் என்பவரிடம் ஒப்படைத்தார். அவரும் என்னை அடித்து கொடுமை செய்து பலமுறை கற்பழித்தார்.
பின்னர், அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்படைத்தார். செல்வம் குடிபோதையில் என்னை பலமுறை கற்பழித்தார். பின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து விபசாரம் செய்ய தொடங்கினார்கள்.
நான் சுயநினைவில் இருக்கும்போது, விபசாரத்துக்கு செல்ல மறுத்தேன். இதனால் நான் மயங்கி விழும் அளவுக்கு என்னை 3 பேரும் அடிப்பார்கள். நான் மயங்கிய நிலையில் இருக்கும்போது, போதை ஊசியை போடுவார்கள். சில நேரம் போதை மாத்திரை கொடுத்தனர்.
நான் போதையில் இருக்கும்போது, பலருக்கு என்னை விருந்தாக்கினார்கள். ஒருமுறை செல்வம், தன் நண்பர்கள் 6 பேருடன் குடிபோதையில் என்னை மெரினா கடற்கரைக்கு அழைத்துச்சென்றார். நடுஇரவில் கடல் அலை அடிக்கும் இடத்துக்கு தூக்கிச்சென்று 6 பேரும் குடிபோதை வெறியில் விடியும் வரை என்னை கற்பழித்தார்கள்.
இதுபோல் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் வெளியூர் நபர்கள் பலருக்கு என்னை இந்த கும்பல் விருந்தாக்கினார்கள். தினமும் குறைந்தது 10 பேருடன் என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய, இந்த கும்பல் பெரும் தொகையை சம்பாத்தியம் செய்தது.
இதில் சிறு தொகையை என் அம்மா சிறுமலருக்கு அந்த கும்பல் கொடுத்தது. எனக்கு அடிக்கடி போதை ஊசி போட்டதால், நான் போதையிலேயே இருந்தேன். எனக்கு நடந்த கொடுமையை என் அம்மாவிடம் கூறினேன். ஆனால், அவர் என் நிலையை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.
இந்த நிலையில், கடந்த மாதம் செல்வம், அவரது வீட்டில் வைத்து என்னை கற்பழித்தார். அதிகாலையில் நான் கண்விழித்து பார்த்தபோது, என்னை வைத்து விபசாரம் செய்யும் செல்வம் உட்பட அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
நான் ஓசைப்படாமல் எழுந்து, செல்வம் சட்டைப்பையில் இருந்து 300 ரூபாயை எடுத்துக்கொண்டு, ரெயில் மூலம் திருப்பதி சென்றேன். வெங்கடாசலபதி முன்பு கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தேன்.
எனக்கு இந்த அசிங்கமான வாழ்க்கை வேண்டாம். உழைத்து சம்பாத்தியம் செய்யக்கூடிய கவுரவமான வாழ்க்கை கொடு என்று அழுதேன். பின்னர், கீழ் திருப்பதி வந்து கையில் வைத்திருந்த ரூபாய் மூலம் மாங்காய் வாங்கி, அதை துண்டு துண்டாக வெட்டி, திருப்பதி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன். நாள் ஒன்றுக்கு ரூ.200 வரை சம்பாத்தியம் செய்தேன்.
அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, இரவில் சாமி தரிசனம் செய்யும் கியூவில் சென்று, அங்கேயே தூங்கிவிடுவேன். தினமும் சாமி தரிசனத்துக்கு இரவில் வரிசையில் நிற்பதை பார்த்த அங்குள்ளவர்கள், சந்தேகப்பட்டு என்னை போலீசில் பிடித்து கொடுத்துவிட்டனர்.
அவர்கள் மூலம் ‘சைல்டு ஹெல்ப் லைன்’ நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்துவரப்பட்டேன். என்னை என் அம்மாவிடம் ஒப்படைக்காதீர்கள். அவர் என்னை மீண்டும் விபசார கும்பலிடம் விட்டு விடுவார். என்னை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு சிறுமி அபர்ணா வாக்குமூலத்தில் கூறி, கதறி அழுதார். இதையடுத்து, அபர்ணாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம், சிறுமி அபர்ணாவின் அம்மா சிறுமலரையும், அபர்ணாவை கற்பழித்து, விபசார கும்பலிடம் ஒப்படைத்த அறவழி சித்தரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பின்னர், கைது செய்யப்பட்ட சிறுமலர், அறவழி சித்தர் ஆகியோரை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நடுவர் கோர்ட்டில், (பொறுப்பு) நீதிபதி ஆர்.சங்கர் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆர்.சங்கர் உத்தரவிட்டார்.
இதையடுத்து 2 பேரும் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய லதா, ஜெயா, செல்வம், குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுமி அபர்ணா தன்னை மெரினா கடற்கரையில் வைத்து கற்பழித்த 6 பேரை அடையாளம் காட்ட முடியும் என்று கூறியுள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.