கார்காலம் துவங்கும் முன்னே .....
உனது கண் சிமிட்டும் நேரத்தில்
எனது இமாலய சாதனை - எனது
கண்கள் உன்னுடன் சங்கமித்தது !
எங்கே போகிறேன் என்று பல
நேரங்களில் எனக்கே தெரிவதில்லை !
காரணம் என்னுடன் உனது
பயணிப்பும் தொடர்வதால்...!
ஒரு ஏகாந்தத்தின் உரிமையாளனாக
என்னை நியமித்தது உனது பார்வைகள் !
வெற்று வெளி கூட வண்ணமயமான
ஊர்வல பூங்காவானது!
உனது புன்னகையின் படிமங்கள் !
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
இது ஐவகை நிலமாக இருக்கலாம்....
எனக்குத் தெரிந்த காதல் நிலத்தின்
குறிஞ்சிப்பூ வனம் உன்னிடத்தில் மட்டுமே
மணம் பரப்பி எனது இதயசிம்மாசனத்தில்
கொலுவீற்று உள்ளது !
கார்காலம் துவங்கும் முன்னே
புரிதல் எனும் உரமிட்டு
அன்பு நீர் பாய்ச்சி காதல் ரோஜாக்களின்
பதியங்களை உள்ளத்தொட்டிகளில்
வளர்த்திட மறுமொழி ஒன்றினை தா.....
தளராத நெஞ்சத்தோடு காத்திருக்கிறேன்...!
.........கா.ந.கல்யாணசுந்தரம்.