தேர்தல் நாள்

நமக்காக வாதிட ஒருவரை
தேர்ந்தெடுக்கும் திருநாள் !
ஏழை பணக்காரன் இணைந்து
வரிசையிலே நின்றிடும் நாள் !
சேவைகள் புரிபவர்க்கு நாம்
வாக்குகள் வழங்கிடும் நாள் !
அவர் தேவைகள் அறிந்தவரை
அடையாளம் காட்டும் நாள் !
முகம் தெரியாதவர் கூட
முகவரி தேடி வரும் நாள் !
உறுதிகளை அளிப்பவருக்கு
முத்திரை குத்திடும் நாள் !
எதிர்பார்க்கும் நமக்கெலாம்
ஏமாற்றமே மிஞ்சிடும் நாள் !
இறந்தவர் மீண்டும் பிறக்கும்
அதிசயம் நிகழ்ந்திடும் நாள் !
வாக்களிக்கும் கைகளுக்கு
கருப்பு மையிடும் கரிநாள் !
வாக்குகள் வாங்குபவர் உயர
வாக்கினை வழங்கிடும் நாள் !
எல்லாம் அறிந்தும் நாமே
நம்மை ஏமாற்றிடும் நாள் !
நம் வாசலை மிதிக்காதவரும்
நம்மை மதித்திடும் நாள் !
அடுத்தவர்க்கு வாக்கு வழங்கி
அரியணை ஏற்றும் நாள் !
வாக்குப் பதிவு முடிந்தவுடன்
நமை யாரென்று கேட்கும் நாள் !
மொத்தத்தில் அன்றுதான் நாம்
மதி மயங்கிடும் பொன்னாள் !
பழனி குமார்