அத்தனையும் அவளாக இருப்பின்

"அத்தனையும் அவளாக இருப்பின் ......"

தன்னையே வார்த்து எனை உள்ளே உருவகம் செய்தாள்
தவழ தொடங்கிய சிவந்த கால்களை கையில் ஏந்தி பயிற்றுவித்தாள்
அறம் தொட்டு ஆறாம் அறிவு வரை அரவணைத்தே உரைத்தாள்
அழகுற ஆடை அணிவித்து அவளுகுள்ளாகவே நெகிழ்ந்தாள்
அம்மா என்றிட அன்பை மட்டுமே தன்னுள் நிரப்பினாள்..

ஓரக்கண்ணில் ஓராயிர காதல் அம்புகள் பாய்ச்சினாள்
நகம் கடித்த அழகிலேயே என் நாட்களை நச்சரித்தாள்
அகமே குளிரும் வண்ணம் அற்புத இரவு ஒன்றில்
அழகுற காதலுரைத்தாள்
கதறும் படி என் காதலை காலத்தினால் பறித்துவிட்டு போனாலும்
கவியென எனக்கு கண்களாய் வந்துவிட்டாள்
காதலியே என்றிட கவிதைகளை விட்டுவைத்தாள்..

வீழ்ந்தது பெண்ணாலே என துவண்டிருக்க விடியலாய் விரிந்துவிட்டாள்
நான் பட்டறிந்த உலக நியதிகளை பக்குவமாய் படித்துக் கொண்டாள்
காயப்பட்ட என் கர்ம வலிகளுக்கு கடவுளாய் காட்சியளித்தாள்
புனிதங்களின் உச்சபட்சமாய் பூவுலக தோழமை காட்டினாள்
தோழியே என்றிட வாழ்க்கை துணையாக நின்றுவிட்டாள்..

எத்தனை முறை கையில் ஏந்தியிருப்பினும்
அத்தனை முறையும் அழகுற எனை சிரித்து சிலிர்ப்பூட்டும்
இவ்வாணிடம் எதுவும் எதிர்ப்பாராத முதல் பெண்ணாய் பிறந்து வந்தாள்
தாய்ப்பாலூட்ட பாவி எனக்கு பெண் மார்பகங்கள் இல்லையே என ஏங்கவைத்தாள்,
கதைகளில் மட்டுமே படித்து உணர்ந்த
காமத்தை களைந்த முத்தங்கள்
முன்று லட்சமாவது இட்டுவைத்தாள்,
கணவனை கைபிடித்த பின்னரும் அவன் கண்களிலே எனையே தேடியிருப்பாள்,
அப்பா என்றிட என் ஆயுளுக்கே
அறம் பாடி முற்று வைத்தாள் !

அத்தனையும் அவளாக இருப்பின்
ஆண் என்கிற இருத்தலே பொய்யோ ..?!

-ராம்

எழுதியவர் : ராம் (27-Aug-13, 11:42 pm)
பார்வை : 70

மேலே