சாய்நாதரின் தாள் பணிவோம்

பாபா நாமம் சொல்லச் சொல்ல
பாவங்கள் பறந்தோடும் !
நாளும் போற்றி பக்தி செய்ய
நற்கதி கிடைத்துவிடும் ....!!
சத்குரு பாதம் பற்றிக் கொண்டால்
பித்தம் தெளிவாகும் !
சத்சரி தம்தினம் வாசித் தாலே
பிறவிப் பிணிதீரும்.....!!
அன்பாய் உருகி வேண்டிக் கொண்டால்
அபயம் அளித்திடுவார் !
பண்ணொடு பாடி துதித்து நின்றால்
பக்கத்துணை இருப்பார் ....!!
உண்மை யுடனுள மாறக் கூப்பிட
உடனே வந்திடுவார் !
உதியை நித்தம் பூசிக் கொண்டால்
உள்ளக்குறை களைவார் ....!!
ஷீரடி நாதரின் தாள்கள் பணிய
சிறப்புகள் தேடிவரும் !
ஷீரடி ஒருமுறை சென்று வந்தால்
சீவன் முக்தி பெறும்...!!
சகலமும் சாயி எனச்சரண் அடைந்தால்
சங்கடம் விலகிவிடும் !
சர்வமும் நீயென பணிந்து விட்டால்
சந்ததி மேன்மையுறும் ...!!
கருணைக் கடலாம் பாபாவைத் தொழ
கனவில் வந்திடுவார் !
தயாள சீலரை அழுது கும்பிட
தரிசனம் தந்திடுவார் ....!!
சாந்த சொரூபன் சாய்பக வானின்
மகத்துவம் பாடிடுவோம் !
அல்லல் மிகுந்த வாழ்வினில் நமது
தொல்லைகள் தொலைத்திடுவோம் ...!!
அருமருந் தாவது பாபா வின்உதி
அதிசயம் பலநிகழ்த்தும் !
பொறுமை நம்பிக்கை யுடன்வேண் டிடவே
வேண்டுதல் நிறைவேறும் ....!!
மதபே தமிலா மகானின் லீலைகள்
மனதில் நிறுத்திடுவோம் !
சத்குரு சரணம் சரணம் என்றே
சாய்ராம் புகழ்சொல்வோம் ....!!!!